This Article is From Aug 25, 2018

மல்லையாவுக்கு இந்திய சிறையில் தரப்பட இருக்கும் வசதிகள் பற்றி தெரியுமா?

இந்திய சிறைகளில் போதிய வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லை என மல்லைய்யா தரப்பில் லண்டன் நீதிமன்றத்தில் முன்னர் கூறப்பட்டது

மல்லையாவுக்கு இந்திய சிறையில் தரப்பட இருக்கும் வசதிகள் பற்றி தெரியுமா?
New Delhi:

தொலைக்காட்சிப் பெட்டி, தனி கழிப்பறை, துவைக்கும் இடம், வெயில்படும் படி நடை பயிற்சி செய்ய காற்றோட்டமான இடம் போன்ற அம்சங்கள் நிரம்பியது, விஜய் மல்லைய்யா அடைக்கப்பட இருக்கும் மும்பை ஆர்த்தர் ரோடு ஜெயிலின், பேரக் எண் 12 சிறை. மல்லைய்யாவை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சித்து வரும் சி.பி.ஐ, இந்த அம்சங்களை எல்லாம் 6-8 நிமிடங்கள் கொண்ட வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்திய சிறைகளில் போதிய வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லை என மல்லைய்யா தரப்பில் லண்டன் நீதிமன்றத்தில் முன்னர் கூறப்பட்டது. நீதிபதி, மல்லைய்யா அடைக்கப்பட இருக்கும் சிறை அறையை வீடியோவாக எடுத்து ஆதாரமாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. அதன் பேரிலேயே இந்த வீடியோ எடுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“இந்திய சிறைகள் ஆரோக்கியமான சூழல் கொண்டதாக இருக்கிறது என்பதை நிரூபிக்கக் கூறியது நீதிமன்றம். நாங்கள் அதற்கான ஆதாரத்தையும், சிறையில் இருக்கும் மருத்துவ வசதிகளையும் பற்றிய ஆதாரத்தை கொடுத்திருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், மல்லைய்யா அடைக்கப்பட இருக்கும் சிறை, கிழக்கு நோக்கியது. அதனால், நல்ல சூரிய ஒளி இருக்கும்” என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது மட்டும் இல்லாமல், மல்லையா சிறையில் இருக்கும் நூலகத்தை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு, சமீபத்தில் இந்திய சிறைகளில் நடத்திய ஆய்வு முடிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களும் சர்வதேச தரத்தில் இருக்கும் எனவும் அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

24 மணி நேரம் சி.சி.டி.வி மூலம் கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், இரண்டு காவலர்கள் அறை முன் பாதுகாப்பில் இருப்பார்கள். இந்த சிறையில், உயிருக்கு ஆபத்து இருக்கும் பல முக்கிய கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு 4 முறை உணவு வழங்கப்படும், என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை, செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது.

.