This Article is From Jun 28, 2018

‘அதிகாரத்துக்காகவே கூட்டணி!’- அகிலேஷ், மாயாவதியை மறைமுகமாக தாக்கிய மோடி

பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளை விமர்சனம் செய்தார்

‘அதிகாரத்துக்காகவே கூட்டணி!’- அகிலேஷ், மாயாவதியை மறைமுகமாக தாக்கிய மோடி

ஹைலைட்ஸ்

  • உத்தர பிரதேச மாநில மகருக்கு இன்று பயணம் செய்துள்ளார் மோடி
  • மகர் தொகுதியில் தான் மோடி லோக்சபா தேர்தலின்போது போட்டியிடுவார் என தகவல்
  • யோகி கபிருக்கு, பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநில மகருக்கு பயணம் செய்துள்ளார். அங்கு அவர் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அப்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளை விமர்சனம் செய்தார்.

இன்னும் ஒரே ஆண்டில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக-வின் பிரசாரப் பயணத்தை மகரிலிருந்து மோடி ஆரம்பித்துள்ளார். மகரில் அவர் யோகி கபிரின் 500-வது பிறந்த நாளை ஒட்டி, சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், ‘கபிர் அகாடமி’-க்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யோகி கபிர், மத சகிப்புத்தன்மை பற்றியும், சாதிகளுக்கு எதிராகவும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் கருத்து கூறியவராக அறியப்படுபவர்.

இந்நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘யோகி கபிர் சாதிகள் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. அவர், அனைத்து மக்களும் சமம் என்று நம்பினார். நாங்கள் கபிரின் கூற்றை ஏற்றுக் கொண்டு, புதிய இந்தியாவைப் படைக்க விரும்புகிறோம். உத்தர பிரதேசத்தில் இதுவரை, நேருக்கு நேர் நிற்க சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் எல்லாம், தற்போது தோலோடு தோல் கோத்து ஒன்றாக நிற்கின்றனர். அது மக்களின் நலனில் அக்கறை கொண்டல்ல. அதிகாரத்தை கைப்பற்றவே அவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். எப்படி பணத்தை வாரிச் சுருட்டுவது என்பது மட்டும் தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது’ என்று சமாஜ்வாதியையும் பகுஜன் சமாஜையும் சூசகமாக தாக்கியுள்ளார் மோடி. 

வாரணாசியிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மகர் தொகுதியில் தான் மோடி, மக்களவைத் தேர்தலுக்காக போட்டியிடுவார் என்று ஆருடம் சொல்லப்படுகிறது.

2019 ஆம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி தொடரும் என்று அகிலேஷ் மற்றும் மாயாவதி அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.