This Article is From Feb 05, 2020

“மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு…”- 5,8 பொதுத் தேர்வு ரத்து பற்றி நடிகர் சூர்யா!

Actor Suriya: “படிக்கும் வயதில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று"

“மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு…”- 5,8 பொதுத் தேர்வு ரத்து பற்றி நடிகர் சூர்யா!

Actor Suriya: "5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது"

தமிழகப் பள்ளிகளில் பயின்று வரும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை முன்னர் அறிவித்திருந்தது. இதற்கு பல தளங்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பொதுத் தேர்வு முறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கு நடிகர் சூர்யா (Suriya), தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 மற்றும் 8வது வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை', குழந்தைகளின் கல்வியில் தொடர்ந்து களப்பணி செய்து வருகிறது. இந்நிலையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது பற்றி சூர்யா, “படிக்கும் வயதில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத் தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்” என்று கூறியுள்ளார்.  


 

.