பெங்களூருவில் கேட்ட திடீர் ‘Boom’ சத்தத்தால் ஏற்பட்ட பீதி… என்ன காரணம்?

Bengaluru: மிராஜ் 2000 போன்ற போர்ப் படை விமானம் மூலம் இந்த சத்தம் கேட்டிருக்கும் என்று பல நெட்டிசன்கள் யூகித்திள்ளனர். 

பெங்களூருவில் கேட்ட திடீர் ‘Boom’ சத்தத்தால் ஏற்பட்ட பீதி… என்ன காரணம்?

Bengaluru News: இந்த சத்தமானது பெங்களூரு விமான நிலையம் முதல், 54 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஐடி துறை நிறுவனங்கள் உள்ள எலக்டிரானிக் சிட்டி வரை கேட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • இன்று மதியம் இந்த 'பூம்' சத்தம் கேட்டுள்ளது
  • ட்விட்டரில் சத்தத்திற்கான காரணம் குறித்து விவாதம் நடந்து வருகிறது
  • இன்னும் சத்தத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து அரசு விளக்கவில்லை
Bengaluru:

பெங்களூரு நகரத்தில் இன்று மதியம், மிகவும் மர்மமான ‘Boom' என்ற சத்தம் கேட்டு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பெங்களூரு நகரவாசிகள் மற்றும் நெட்டிசன்களுக்கு இடையில் ட்விட்டர் தளத்தில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. கர்நாடகாவின் இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம், இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்க முடியவில்லை. அதே நேரத்தில் இது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சத்தம் இல்லை என்று மட்டும் விளக்கம் கொடுத்துள்ளது. 

இந்த சத்தமானது பெங்களூரு விமான நிலையம் முதல், 54 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஐடி துறை நிறுவனங்கள் உள்ள எலக்டிரானிக் சிட்டி வரை கேட்டுள்ளது. மேலும் கல்யாண் நகர், எம்.ஜி ரோடு, மரதஹல்லி, வொயிட்ஃபீல்டு, சர்ஜாபூர், ஹெப்பாகோடி உள்ளிட்டப் பகுதிகளும் ‘பூம்' சத்தம் கேட்டுள்ளதாக தெரிகிறது. 

“நிலநடுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் வராது. அது பரந்துபட்ட இடத்தில் ஏற்படும். எங்கள் சென்சார்களை நாங்கள் நன்றாக பரிசோதித்துவிட்டோம். அதிலிருந்து நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான எந்த தரவுகளும் இல்லை,” என்று விளக்கம் கொடுத்துள்ளார், கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் சார்பில், “நிலநடுக்கத்தால் இன்று பெங்களூருவில் சத்தம் கேட்கவில்லை. அது குறித்து எந்த தரவுகளும் கிடைக்கவில்லை. இது ஒரு மிகப் பெரிய சத்தம் மட்டுமே,” என்று ட்வீட்டியுள்ளது. 

மிராஜ் 2000 போன்ற போர்ப் படை விமானம் மூலம் இந்த சத்தம் கேட்டிருக்கும் என்று பல நெட்டிசன்கள் யூகித்திள்ளனர். 
 

பெங்களூரு போலீஸ் கமிஷனர், “விமானப் படை கட்டுப்பாட்டு அறையிடம், சத்தம் ஏற்பட்டதற்குக் காரணம் ஜெட் அல்லது சூப்பர் சோனிக் சத்தத்தினாலா என்று கேட்டுள்ளோம். விமானப் படையிடமிருந்து வரும் பின்னூட்டத்திற்காக காத்திருக்கிறோம்” என்றுள்ளார். 

“மிகப் பெரிய சத்தம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து உறுதிபடுத்த முயன்று வருகிறோம். வொயிட்ஃபீல்டு பகுதியில் எதாவது இடத்தில் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்றும் சோதனை செய்தோம். இதுவரை எந்தச் சேதாரம் குறித்தும் தகவல் இல்லை,” என்று விளக்கியுள்ளார் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி. எந்த பாதிப்போ, விபரீதம் குறித்தோ பெங்களூரு போலீஸுக்கு இதுவரை புகார் வரவில்லை.