சபரிமலை செல்ல முயன்ற பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே தாக்குதல்!!

Sabarimala: இதுதொடர்பாக மொபைலில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், பிந்து அம்மிணியுடன், மற்றொரு ஆர்வலரும் தங்களது முகங்களை மறைத்தபடி செல்கின்றனர். கொச்சி காவல் ஆணையர் அலுவலகம் அருகே இருவரையும் துரத்தி வரும் நபர் ஒருவர் அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே மூலம் தாக்குதல் நடத்துகிறார்.

சபரிமலை செல்ல முயன்ற பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே தாக்குதல்!!

கொச்சி அருகே சமூக ஆர்வலர் பிந்து அம்மிணி மீது பெப்பர் ஸ்பிரே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Kochi:

சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக கேரளாவின் கொச்சிக்கு வந்த பெண் ஆர்வலர்கள் மீது காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெப்பர் ஸ்பிரே தாக்குதல் நடந்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியாகியுள்ள மொபைல் வீடியோவில், பிந்து அம்மிணியுடன், மற்றொரு ஆர்வலரும் தங்களது முகங்களை மறைத்தபடி செல்கின்றனர். அப்போது, கொச்சி காவல் ஆணையர் அலுவலகம் அருகே இருவரையும் துரத்தி வரும் நபர் ஒருவர் அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே மூலம் தாக்குதல் நடத்துகிறார். 

தொடர்ந்து, காவி வேட்டி கட்டிய அந்த நபர் பிந்து மீது பெப்பர் ஸ்பிரே தாக்குதல் நடத்திவிட்டு, அந்த வளாகத்தில் இருந்து தப்பிச்செல்கிறார். 

சபரிமலை செல்ல முயலும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தராது என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும், சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக இன்று காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருடன் மேலும், 5 பெண்களும் தரிசனம் மேற்கொள்ள வருகை தந்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருப்தி தேசாய், அரசியலமைப்பு நாளான இன்று சபரிமலை கோயிலுக்குள் செல்வோம், கோயிலுக்குள் செல்வதை மாநில அரசோ, காவல்துறையோ தடுக்க முடியாது. எங்களுக்கு பாதுகாப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் சபரிமலை கோயிலுக்கு செல்வது உறுதியாக கூறினார். 

தொடர்ந்து, திருப்தி தேசாய் உட்பட 6 பெண்கள் கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என்று நூற்றாண்டுகளாக பெண்கள் வழிபட விதிக்கப்பட்ட தடையை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. 

இதற்கு இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதேபோல், சபரிமலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியமும், மக்களின் நம்பிக்கைக்கைகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று கூறிவந்தது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கேரள அரசு ஆதரவு தெரிவித்தது. இதனிடையே தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு நாள்களில் நாடு முழுவதும் இருந்து மொத்தம் 65 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை விசாரித்து வந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு அண்மையில், இந்த வழக்கை 7 நீதிபகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். மேலும், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் கடந்த ஆண்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தனர். 

More News