This Article is From Aug 26, 2019

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதிக்கு பரிசுகள் அளித்த அருண் ஜெட்லி!!

கடந்த ஆண்டின்போது, சோனியா காந்தியின் மக்களவை தொகுதிக்கு நலத்திட்டங்களை அறிவிக்கப்போவதாக அருண் ஜெட்லி விருப்பம் தெரிவித்திருந்தார். இது மக்களவை தேர்தலுக்கான 'ஸ்டன்ட்' என்று காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்திருந்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதிக்கு பரிசுகள் அளித்த அருண் ஜெட்லி!!

உடல்நலக் குறைவு காரணமாக அருண் ஜெட்லி நேற்று முன்தினம் காலமானார்.

Lucknow:

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரே பரேலி தொகுதிக்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் நல உதவிகள் செய்திருப்பதை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். 

நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று முன்தினம் காலமானார். இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின்போது, சோனியாவின் தொகுதிக்கு நல உதவிகள் செய்ய விருப்பம் உள்ளதாக கூறியிருந்தார். இது தேர்தலையொட்டி அவர் செய்யும் ஏமாற்று வேலை என்று காங்கிரசார் விமர்சித்து வந்தனர். 

இந்த நிலையில், அருண் ஜெட்லி மறைவதற்கு முன்பாக ரேபரேலி தொகுதியில் சூரிய மின் சக்தியில் இயங்கும் 200 ஹைமாஸ் லைட்டுகளை அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருக்கிறார். இதுதொடர்பான கடிதம் கடந்த ஜூலை 30-ம்தேதி ரேபரேலி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் ஊரக மேம்பாட்டு நிதியின்படி, எம்பிக்கள் ரூ. 5 கோடி வரைக்கும் நலத்திட்டங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்ய முடியும். அருண் ஜெட்லியின் கடிதத்தை ரேபரேலி மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார். 

ஜெட்லியின் பரிந்துரைப்படி பணிகள் நடந்து வருவதாகவும், லைட்டுகளை பொருத்தும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள மாவட்ட ஆட்சியர் நேஹா சர்மா, தீபாவளிக்குள் ஹைமாஸ் லைட்டுகள் பொருத்தப்பட்டு விடும் என்று தெரிவித்தார். 

மாற்று கட்சியின் தலைவருடைய தொகுதியாக இருப்பினும், அங்கு நலத்திட்ட உதவிகளுக்கு தனது நிதியை பரிந்துரைத்த அருண் ஜெட்லியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.