This Article is From Feb 23, 2020

உ.பி.யில் 30 லட்சம் கிலோ எடைகொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு! கனவிலும் காணமுடியாத பிரமாண்டம்

தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடிக்கும் பணிகள் உத்தரப்பிரதேசத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி நடைபெற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோன்பத்ரா மாவட்டத்தில் சோன் பஹதி மற்றும் ஹர்தி பகுதியில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Sonbhadra, UP:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 ஆயிரம் டன் (30 லட்சம் கிலோ) எடை கொண்ட தங்கச் சுரங்கத்தை இந்தியப் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சோன்பத்ரா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த தங்கச் சுரங்கத்தின் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மத்திய அரசு இருப்பில் வைக்கும் நிதியை விட 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன் பஹதி மற்றும் ஹர்தி பகுதியில் சுரங்கத்திற்குள் தங்கம் கொட்டிக் கிடப்பதாக மாவட்ட கனிம வள அதிகாரி கே.கே. ராய் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் கடந்த 1992 - 93-ம் ஆண்டிலேயே தங்கம் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கும் பணியை புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தொடங்கினர். அவர்களது ஆய்வுக்கு சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பலன் கிடைத்திருக்கிறது.

பூமிக்குள் கிடக்கும் பொக்கிஷத்தை வெளியே கொண்டு வருவதற்காக ஆன்லைன் முறையில் ஒப்பந்தம் விடும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

சோன் பஹதி பகுதியில் சுமார் 2,943.26 டன்னும், ஹர்தி பகுதியில் 646.16 கிலோ தங்கமும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தங்கத்தைத் தவிர்த்து மற்ற சில விலை உயர்ந்த கனிமங்களும் இந்த பகுதியில் இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

உலக தங்க கவுன்சிலின் தகவல்படி இந்தியா தற்போது 626 டன் தங்கத்தை இருப்பில் வைத்துள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது உத்தரப்பிரதேசத்தில் 5 மடங்கு தங்கம் பூமிக்குள் புதைந்திருக்கிறது. இதன் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சோன்பத்ரா மாவட்டம் என்பது நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். முதன்முறையாக இங்கு ஆங்கிலேயர்கள் தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

சோன்பத்ரா, உத்தரப்பிரதேசத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இந்த மாவட்டம்தான், மேற்கில் மத்தியப் பிரதேசம், தெற்கில் சட்டீஸ்கர், தென் கிழக்கில் ஜார்க்கண்ட், கிழக்கில் பீகார் மாநிலங்களை எல்லையாகக் கொண்டுள்ளது. 

.