This Article is From Aug 13, 2019

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை மீண்டும் வரும் 17-ம் தேதி குளத்தில் வைக்கப்பட உள்ளது. 

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்துவரப்படும் அத்திவரதர் சிலை, 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும். 

இதற்கு முன்பு 1939 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் அத்திவரதர் சிலைக்கு வைபவங்கள் நடைபெற்றன. இந்நிலையில், கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை மீண்டும் வரும் 17-ம் தேதி குளத்தில் வைக்கப்பட உள்ளது. 

கடந்த 31-ந்தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

மேலும், அத்திவரதரை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் காஞ்சிபுரத்திற்கு படையெடுத்து வருகின்றனர். தரிசனத்துக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த மட்டும் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4 போலீஸ் ஐ.ஜி.க்கள், 6 டி.ஐ.ஜி.க்கள், 30 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, அத்திவரதரை பலர் இன்னும் தரிசிக்காத காரணத்தால் உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

.