This Article is From May 13, 2019

''என்னை கைது செய்ய தைரியம் இருக்கிறதா?'' - மம்தாவிடம் சவால் விடுத்த அமித் ஷா!!

ஜாதவ்பூர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா பிரசாரம் செய்வதற்கு மேற்கு வங்க அரசு அனுமதி அளிக்கவில்லை. நேற்று அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

மம்தாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Joynagar, West Bengal:

தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று மம்தாவிடம் பாஜக தலைவர் அமித் ஷா சவால் விடுத்துள்ளார். 7-வது கட்டமாக மக்களவை தேர்தல் மே 19-ம்தேதி நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இதையொட்டி பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று பாஜக தலைவர் அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு  மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை. இதையடுத்து, திரிணாமூல் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதன்பின்னர் ஜாதவ்பூர் தொகுதியில் அமித் ஷா பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தெற்கு 24 பர்கனாசில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 'இன்றைக்கு 3 பொதுக் கூட்டங்களில் நான் பேசுவதாக இருந்தது. அதில் ஒரு தொகுதியில் மம்தாவின் உறவினர் போட்டியிடுகிறார். நான் பேசினால் அவர் தோற்று விடுவார் என்பதால் எனது பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

நான் கொல்கத்தாவை விட்டுச் செல்லும்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டுத்தான் செல்வேன். தைரியம் இருந்தால் மம்தா என்னை கைது செய்து பார்க்கட்டும்' என்றார். 

மம்தாவுக்கு அமித் ஷா விடுத்திருக்கும் சவால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படத்தியது. சில நாட்களுக்கு முன்பு மம்தா பானர்ஜி காரில் சென்று கொண்டிருந்தபோது, செல்லும் வழியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். இதையடுத்து, முழக்கமிட்டவர்களை மம்தாவின் கார் துரத்திச் சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனை மையப்படுத்தி அமித் ஷா, பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். மே 19-ம்தேதி, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 

.