This Article is From Aug 11, 2018

மேற்கு வங்கத்தில் அமித்ஷா… எதிர்க்கத் தயாராகும் திரிணாமூல்… பரபரக்கும் அரசியல் களம்!

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, அங்கிருக்கும் 42 லோக்சபா எம்.பி சீட்களில், பாஜக இரண்டை மட்டுமே கைவசம் வைத்துள்ளது

Kolkata:

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் இன்று பிற்பகல் பாஜக-வின் பேரணியில் கலந்து கொள்ள உள்ளார் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா. அவருக்கும் எதிர்ப்புத் தெரிவிக்க அம்மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமூல் காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகியுள்ளது. இதனால், மேற்கு வங்கத்தில் அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்தப் பேரணிக்கு முதலில் கொல்கத்தா போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்று அம்மாநில பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், பேரணி நடைபெற உள்ள இடத்தில் ‘மேற்கு வங்கத்துக்கு எதிரான பாஜக திரும்பி செல்’ என்ற எழுத்துகள் அச்சிடப்பட்டுள்ள பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று மாநில தழுவிய அளவில், ‘அசாம் குடிமக்கள் பதிவேடு’-க்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது திரிணாமூல். இந்தப் போராட்டம் கொல்கத்தாவில் நடைபெறாது என்று சொல்லப்பட்டுள்ளது. அமித்ஷாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே, இந்த அனைத்து நடவடிக்கைகளையும் திரிணாமூல் முழு வீச்சில் செய்து வருவதாக கூறுகிறது அம்மாநில பாஜக.

2018

இன்றைய போராட்டம் குறித்து பேசியுள்ள பாஜக, மற்ற மாவட்டங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு வரும் பாஜக-வினரை தடுக்கவே இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேற்கு வங்க பாஜக-வின் தலைவர் திலிப் கோஷ், ‘திரிணாமூல் காங்கிரஸின் இந்தப் போராட்டத்தால், இரு கட்சியினருக்கும் இடையில் மோதல் நடக்கும். அப்படி நடந்தால் அரசுதான் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார். ஆனால், போராட்டம் நடத்துவதில் திரிணாமூல் கட்சி முனைப்பாக இருப்பதாக தெரிகிறது.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, அங்கிருக்கும் 42 லோக்சபா எம்.பி சீட்களில், பாஜக இரண்டை மட்டுமே கைவசம் வைத்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அம்மாநிலத்தில் பாஜக வளர்ச்சி பெற்றுள்ள காரணத்தால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 50 சதவிகித இடங்களையாவது வெற்றி பெற வேண்டுமென்று பாஜக-வினருக்கு அமித்ஷா வலியுறுத்தி வருகிறார். அதை மனதில் வைத்து தான் இன்று மாபெரும் பேரணியை பாஜக நடத்த உள்ளது.

rt005788

இது ஒரு புறமிருக்க, சமீக காலமாக பாஜக-வுக்கும் திரிணாமூல் காங்கிரஸுக்கும் இடையில் பெரும் வாதப் பிரச்னையை ஏற்படுத்தி வருவது ‘அசாம் குடிமக்கள் பதிவேடு’ விவகாரம் தான். ‘பதிவேடு பட்டியலில் விடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், ரத்த வெள்ளம் ஓடும். உள்நாட்டுப் போர் வெடிக்கும்’ என்று எச்சரித்து பாஜக-வைத் தாக்கினார் திரிணாமூல் தலைவர் மம்தா பானர்ஜி.

அதற்கு அமித்ஷா கடும் கண்டனங்களை தெரிவித்து, ‘அசாம் குடிமக்கள் பதிவேட்டைப் பொறுத்தவரை, அனைத்தும் நீதிமன்ற வழிகாட்டுதல்படியே நடக்கும். தேவையில்லாமல் யாரும் குழப்பம் விளைவிக்க வேண்டாம்’ என்று பதிலடி கொடுத்தார்.

இன்றைய பேரணியில் இது குறித்தும் அமித்ஷா பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.