This Article is From Nov 10, 2018

கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாட்டம்: போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர் கைது!

கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி இன்று பலத்த எதிர்ப்புகளை மீறி அரசு விழாவாக நடந்து வருகிறது

Tipu Sultan Jayanti 2018: திப்பு ஜெயந்தி விழாவுக்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

Bengaluru:

கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி இன்று பலத்த எதிர்ப்புகளை மீறி அரசு விழாவாக நடந்து வருகிறது. ஆனால், இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாஜக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மாநில முதல்வர் குமாரசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால், அரசு நடத்தும் திப்பு ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கர்நாடக அரசை, பாஜக கடுமையாக சாடி வருகிறது.

குடகு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலரை போலீஸ் இன்று கைது செய்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் திப்பு ஜெயந்தியை, கர்நாடக அரசு கொண்டாடி வருகிறது. தற்போது மஜத - காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி புரிந்து வரும் அரசும், திப்பு ஜெயந்தியை கொண்டாட முடிவெடுத்து இன்று நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளது. அரசு தரப்பில், '18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திப்பு சுல்தான், இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர். அவர் 4வது ஆங்கிலோ- மைசூர் போரில் இறந்தார். அவருக்கு அரசு விழா எடுப்பதில் தவறில்லை' என்று நியாயப்படுத்தியுள்ளது.

இதற்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங் பரிவார், ‘மிகக் கொடூரமான அரசரான திப்பு சுல்தான், பல இந்துக்களையும் கிறித்துவர்களையும் கொன்று குவித்தவர். இஸ்லாம் மதத்துக்கு மாறாதவர்களை அவர் துன்புறுத்தினார். முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை வாங்குவதற்காக கர்நாடக அரசு இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறது' என்று கூறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, ‘ஒரு மதத்தைச் சேர்ந்தவரை கர்நாடக அரசு கொண்டாடவில்லை. திப்பு சுல்தான் நாட்டுப் பற்று மிக்கவர், மசத்தார்பற்றவர் ஆவார். அவரின் ஜெயந்தியை கொண்டாடுவது தவறில்லை' என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அரசு தரப்பு, திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ போராடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

முதல்வர் குமாரசாமி, ‘திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் நடக்கும். அதை குலைக்க நினைக்கும் நபர்கள் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கும்' என்று நம்மிடம் கூறியுள்ளார்.

.