This Article is From Jul 19, 2018

அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் நடந்த விபரீதம்… திடுக் வீடியோ!

நம்மூரைப் போல அமெரிக்காவிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சமே இல்லை

அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் நடந்த விபரீதம்… திடுக் வீடியோ!

நம்மூரைப் போல அமெரிக்காவிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சமே இல்லை. அதில் பிரபலமான ஒன்று தான், ‘அமெரிக்கா’ஸ் காட் டேலன்ட்’ என்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட துறைகளிலிருந்து வரும் நபர்கள், தங்கள் திறமையை மக்கள் முன்னர் அரங்கேற்றுவார்கள். இதற்கு நடுவர்கள் மூலம் மதிப்பெண் கொடுக்கப்படும். அதிக மதிப்பெண்கள் பெறுவோர் அடுத்தடுத்த சுற்றுக்குத் தகுதியடைவர்.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த ‘அமெரிக்கா’ஸ் காட் டேலன்ட்’ நிகழ்ச்சியில் டைசன் நீல்சன் மற்றும் மேரி நீல்சன் என்ற தம்பதி, ‘ட்ரபீஸ் டிரிக்’ செய்து காட்டினர். கண்ணைக் கட்டிக் கொண்டும், நெருப்புக்கு மேல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டும் இருவரும் பல சாகசங்களை புரிந்தனர். கிட்டத்தட்ட அவர்களின் சாகசம் முடிய இருந்த தறுவாயில் டைசன், மேரியை கையிலிருந்து நழுவவிட்டார். இதனால், மேரி தரையில் வேகமா விழுந்தார். ‘தடக்’ என்ற பெரும் சத்தம் கேட்க டைசன், ‘மேரிக்கு ஒன்றும் ஆகவில்லை தானே?’ என்று அந்தரத்திலிருந்து வினவினார். பார்வையாளர்கள் அனைவரும் அவர்களது சீட்டிலிருந்து எழும்பி மேடை நோக்கி வந்தனர். நடுவர்கள் வாயடைத்திருந்தனர்.

ஆனால் மேரி, சிரித்த முகத்துடன் எழுந்து நின்று மக்களுக்கு நோக்கிக் கையசைத்தார். டைசனும் அந்தரத்திலிருந்து கீழே இறங்கி வந்து மேரியை ஆரத்தழுவிக் கொண்டார்.

தம்பதி இருவரும் கீழே வந்த பின்னர், நடுவர்கள் அவர்களது அரங்கேற்றம் குறித்து புகழ்பாட ஆரம்பித்தனர். ஜட்ஜுகளை இடைமறித்து மேரி, ‘கடைசியாக நாங்கள் செய்யாமல் விட்ட சாகசத்தை மீண்டும் ஒருமுறை முயன்று பார்க்க விரும்புகிறோம்’ என்று சொன்னார். அதற்கு நடுவர்களில் ஒருவர், ‘அது தேவையில்லை என்று நினைக்கிறேன். நாம் அனைவரும் மனிதர்கள் தான். அனைவரும் தவறுகள் செய்வது சகஜம் தான். நீங்கள் கவலைப்பட வேண்டாம். அடுத்த சுற்றுக்கு நீங்கள் தகுதி பெற்றுவிட்டீர்கள்’ என்று கூற அரங்கமே அதிரும் அளவுக்கு கரகோஷம் எழுந்தது.

தம்பதியின் அரங்கேற்றத்தை அவர்களின் 2 வயது குழந்தையும் மக்களில் ஒருவராக பார்த்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தவறு நடந்திருந்தாலும், அந்த விஷயத்தை முற்போக்காக எடுத்துக் கொண்டு நடுவர்கள் சம்பவத்தைக் கையாண்ட விதமும் தம்பதிகள் பேசிய விதமும் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளைக் கொண்டது. டைசனுக்கு பார்வையில் ஒரு சிறிய கோளாறு இருப்பது குறிப்பிடத்தக்கது.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.