This Article is From Jan 05, 2019

ஓரங்கட்டப்படும் காங்கிரஸ் : உ.பி.யில் அகிலேஷ் யாதவ் - மாயாவதி சந்திப்பு

சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என அகிலேஷ், மாயாவதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரம் இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை ஓரங்கட்டும் முயற்சியில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஈடுபட்டுள்ளனர். இரு தலைவர்களும் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச அரசியலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர் துருவங்களாக இருக்கின்றன. இந்த நிலையில் இரு கட்சி தலைவர்களும் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்கள். 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்த நிலையில், பாஜக 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ள சூழலில் இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது.

இரு தலைவர்களும் காங்கிரசின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அமைச்சரவையில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு எதையும் காங்கிரஸ் அளிக்கவில்லை.

இதுகுறித்து பதில் அளித்திருந்த அகிலேஷ் யாதவ், ''எங்கள் கட்சி எம்.எல்.ஏ.-க்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கவில்லை. காங்கிரசுக்கு நன்றி'' என்று கூறியிருந்தார்.

கடந்த மக்களவை தேர்தலின்போது பாஜக கூட்டணி உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80-ல் 73 தொகுதிகளை கைப்பற்றியது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தலில் அக்கட்சி மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவிடம் 2 தொகுதிகளை இழந்துள்ளது.

அடுத்த வாரமும் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோரின் சந்திப்பு இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு உத்தர பிரதேச அரசியலில் மட்டும் அல்லாமல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

.