This Article is From Feb 07, 2020

”கம்பால் அடிப்பார்களாம்”! - மீண்டும் ராகுலை சீண்டிய மோடி!

நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பாதுகாப்பு கவசம் உள்ள ஒருவருக்கு எந்த தீங்கும் நேராது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

போடோ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரதமர் மோடி அசாமில் இன்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

New Delhi:


வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் பிரதமர் மோடியை கம்பால் அடிப்பார்கள் என்று, ராகுல் காந்தி கூறியதை குறிப்பிட்டு பிரதமர் மோடி மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

வரலாற்றுச் சிறப்புமிக்க போடோ ஒப்பந்தத்தை கொண்டாடும் விதமாக அசாமில் இன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது, இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் என்னை ஆசிர்வதிக்க தாய்மார்களும், சகோதரிகளும் வருகை தந்துள்ளனர்.

ஆனால், ஒரு சிலர் என்னை கம்பால் அடிப்பது குறித்து பேசி வருகின்றனர். பல தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசீர்வாதங்களால் பாதுகாக்கப்படுபவன் இந்த மோடி. அதனால், எனக்கு எந்த ஒரு தீங்கும் நேராது என்றார். 

முன்னதாக டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, இன்னும் 6 மாதத்தில் பிரதமர் மோடி அவரது வீட்டை விட்டே வெளியே வர முடியாது. வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் பிரதமர் மோடியை
கம்பால் அடிப்பார்கள் என்று, ராகுல் காந்தி பேசியிருந்தார். 

இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய மோடி, ராகுலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறும்போது, 6 மாதங்களில் இளைஞர்கள் என்னை பிரம்பால் அடிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் பேசியதாக அறிந்தேன்.

அதற்கு தயாராக 6 மாதம் தேவை தான். அதனால் அடுத்த 6 மாதங்களில் எனது சூர்ய நமஸ்காரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளேன்.அவர்களின் அடியை தாங்கும் அளவிற்கு, அதிக சூரிய நமஸ்காரங்களால் எனது முதுகையும் போதுமான அளவிற்கு வலிமையாக்கி வைத்துக் கொள்கிறேன் என்றார். 

தொடர்ந்து, மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் ராகுல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க எழுந்த ஹர்ஷவர்தன், இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் பிரதமர் மோடி குறித்து ராகுல் கூறிய கருத்து பற்றி பேச விரும்புகிறேன். அவரின் மோசமான, ஏற்க முடியாத வார்த்தையை கண்டிக்க வார்த்தைகள் இல்லை என்றார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பிக்கள் அவரை பேசவிடாமல் எதிர்த்து கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், கேள்விக்கு பதிலளிக்கும்படி ஹர்ஷவர்தனை கேட்டுக் கொண்டார். இதையடுத்து எழுத்துபூர்வமான தனது பதிலை அவர் வாசிக்க துவங்கினார். ஆனால் மத்திய அமைச்சரின் வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். 

தமிழக காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்க தாகூர், கோபமாக முன்வரிசைக்கு வந்து ஹர்ஷவர்தனை நோக்கி கைகளை ஓங்கினார். உடனடியாக அங்கு வந்த பாஜக எம்.பி. பிர்ஜ் பூஷண் சரண்சிங், தாகூரின் கைகளை பிடித்து தடுத்தார். இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஒரு பிரதமருக்கு சிறப்பு அந்தஸ்து உண்டு. பிரதமர் பதவியில் இருப்பவர்களுக்கு தனி குணாதிசியம் மற்றும் பண்பு உள்ளது. ஆனால் நமது
பிரதமருக்கு இந்த விஷயங்கள் இல்லை. அவர் பிரதமரைப் போல நடந்து கொள்வதில்லை.

முன்னதாக, கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது, காங்கிரஸ் சவுக்கிதார் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஆனால், பிரதமர் மோடி அதனை தனது ஆதரவு பிரச்சாரமாக வெற்றிகரமாக மாற்றியமைத்தார்.

இதைத்தொடர்ந்து, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் சமூகவலைதளங்களில் தங்களது பெயருக்கு முன் சவுக்கிதார் என்று மாற்றிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, தற்போது, பிரதமர் மோடி மீது தனிப்பட்ட விமர்சனத்தை வைத்து விட்டு அதனை சமாளிக்க காங்கிரஸ் கட்சி தடுமாறி வருகிறது. 
 

.