This Article is From Jan 06, 2019

பதவி விலக நீங்கள் தயாரா? ராகுலுக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த நிர்மலா!

ராகுல்காந்தி கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் ஏபிசியில் இருந்து தொடங்கி முழு ஆவணத்தையும் வாசிக்க தொடங்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு விரிவான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளதாக நிர்மலா தெரிவித்துள்ளார்.

New Delhi:

நாடாளுமன்றத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடிக்கான ஆர்டர்கள் குறித்த ஆவணங்களைக் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். அல்லது பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல்காந்தி கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் ஏபிசியில் இருந்து தொடங்கி முழு ஆவணத்தையும் வாசிக்க தொடங்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறையை சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யாமல், அனில் அம்பானிக்கு ஆதாயம் ஏற்படுத்தி தருவதற்காக அவரது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிர்மலா மறுத்துள்ளார்.
 

முன்னதாக இதுகுறித்து ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், நிர்மலா கூறுவது பொய் என்று குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, ரபேல் விவகாரத்தில் பிரதமருக்கு ஆதரவாக பேசி ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை அவர் கூறிவருவதாக தெரிவித்தார்.

மேலும், நாளை நாடாளுமன்றத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடிக்கான ஆர்டர்கள் குறித்த ஆவணங்களைக் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். அல்லது பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் டிவிட்டருக்கு சில மணி நேரங்களிலே பதிலளித்த நிர்மலா சீதாராமன், நீங்கள் ஏபிசியில் இருந்து வாசிக்க தொடங்க வேண்டும் என்பது போல் தெரிகிறது. உங்களை போன்று பொதுமக்களை தவறாக வழிநடத்துபவர்கள், வாசிப்பதற்கு முன்பே ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டுவார்கள் என்று கூறினார்.

மேலும், காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு பொய்களை பரப்புவதும், மக்களை தவறாக வழிநடத்துவதும் பெரும் அவமானம் என்றும் இதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரிவிட்டு ராகுல் பதவி விலக தயாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, கடந்த வெள்ளியன்று மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமானங்களை வாங்க காங்கிரசுக்கு விருப்பமும் இல்லை. போர் விமான ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் நலனை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக ராகுல் காந்தி கூறுவது, முதலைக் கண்ணீர் வடிப்பது போன்றது.

பாஜக ஆட்சிக்கு வந்த பின், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள்ளாக முதல் போர் விமானம் கொள்முதல் செய்யப்பட்டு விடும், 2022ஆம் ஆண்டிற்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிற்கு கிடைத்து விடும் என்று உறுதி அளித்தார்.

இதனிடையே இந்துஸ்தான் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே அந்த நிறுவனம் ரூ.1000 கோடி கடன் வாங்கியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
 

Disclaimer: NDTV has been sued for 10,000 crores by Anil Ambani's Reliance Group for its coverage of the Rafale deal.

.