This Article is From Nov 10, 2018

அதிமுகவின் எதிர்ப்பைத் தொடர்ந்து சர்கார் படத்தில் 4 காட்சிகள் நீக்கம்

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் 4 காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதிமுகவின் எதிர்ப்பைத் தொடர்ந்து சர்கார் படத்தில் 4 காட்சிகள் நீக்கம்

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காதவரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

Chennai:

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி, அதிமுகவினர் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

அமைச்சர்களின் வலியுறுத்தல், அதிமுகவினரின் தொடர் போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகளை தொடர்ந்து சர்கார் திரைப்படத்தில் 4 காட்சிகள் மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

5 நிமிடம் ஓடக்கூடிய காட்சி ஒன்று முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து 3 இடங்களில் ஆடியோ மட்டும் ம்யூட் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்றிரவு சர்கார் திரைப்பட இயக்குனர் முருகதாஸின் வீட்டில் போலீசார் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதனால் அவர் கைது செய்யப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அவரது பாதுகாப்பு காரணமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து வரும் 27-ம்தேதி வரை முருகதாஸை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்கார் திரைப்படத்தை பொறுத்தவரையில் இயக்குனர் முருகதாஸ் சிறிய ஒரு காட்சியில் மட்டும் நடித்துள்ளார். அவர், அரசால் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டரை தூக்கி வீசுவதுபோல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் வில்லிக்கு கோமள வல்லி என்ற பெயர் அளிக்கப்பட்டுள்ளது. இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர். இதனால் இந்த படம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த அதிமுக அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் சர்ச்சை காட்சிகளை நீக்காமல் படத்தை திரையிடக் கூடாது என்று தெரிவித்தனர். சர்கார் திரைப்படம் திரையிடப்பட்ட பெரும்பாலான திரையரங்கங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தொடர் எதிர்ப்பு காரணமாக சர்கார் படத்தில் 4 காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.
 

.