This Article is From Mar 25, 2020

சென்னையில் கொரோனா தொடர்பான உத்தரவை மீறிய 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

Coronavirus Tamilnadu: மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் கொரோனா தொடர்பான உத்தரவை மீறிய 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

Coronavirus Tamilnadu: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 23-ஆக உயர்ந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 23 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்
  • இன்று முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது

Coronavirus Tamilnadu: தமிழகத்தில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 23-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது கொரோனாவால் தமிழகத்தில் ஏற்படும் முதல் உயிரிழப்பு.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  ‘சேலத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அவர்களின் பயண வழிகாட்டிக்கும்தான் கொரானா இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 22 ஆம் தேதி முதல் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,' எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொடர்பாக விதிக்கப்பட்ட உத்தரவை மீறிய 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் என்றும், சீனாவிலிருந்து திரும்பி வந்த அந்த நபர் அரசின் உத்தரவுக்கு எதிராக வெளியில் சுற்றி வந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதேபோல ஈராக்கிலிருந்து திரும்பிய இருவர், தங்களது கோயம்பேடு வீட்டிலிருந்து சொந்த ஊருக்குத் தகவல் சொல்லாமல் புறப்பட்டு சென்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மூவர் மீதும் நோய் பரப்பும் வகையில் நடந்து கொள்ளுதல், அரசின் உத்தரவை அலட்சியப்படுத்துதல், தொற்றுநோய் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரம் கூறுகின்றது. 

.