This Article is From Oct 21, 2018

அமிர்தசரஸ் ரயில் விபத்து பகுதியிலிருந்து 10 மாத குழந்தை மீட்பு!

தசரா விழாவின் போது, தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதி விபத்ததுக்குள்ளானது. இந்த விபத்து நடந்து முடிந்து 4 மணி நேரம் கழித்து அங்கிருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டுள்ளது

அமிர்தசரஸ் கோர ரயில் விபத்து; குழந்தையை மீட்க யாரும் வரவில்லை என்றால் தத்தெடுப்பு மையத்திற்கு குழந்தை அனுப்பி வைக்கப்படும்.

Amritsar:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விபத்து நடந்த 4 மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளத்தின் அருகே 10 மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. போலீசாரால் இதுவரை அந்த குழந்தையின் பெற்றோரை கண்டறிய முடியவில்லை.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, குழந்தை குறித்து விபரம் எவருக்கேனும் தெரிந்தால், அவர்கள் இந்த 0183 2220205 எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது இதனால், அமிர்தசரஸில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இது குறித்து போலீசார் என்டிடிவியிடம் கூறியதாவது, குழந்தையின் பெற்றோர் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் குழந்தை தத்தெடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளர்

அமிர்தசரஸ் கோர ரயில் விபத்தை தொடர்ந்து, பல்வேறு காவல்நிலையங்களில் இதுவரை 20 பேர் காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா விழாவை காண சென்ற குடும்பத்தினர் உறவினர்களை தொலைத்து ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று வருகின்றனர்.

ரயில் விபத்தில் பாதிப்படைந்தவர்களின் குடும்ப பின்னனி குறித்து விசாரிக்கவும், அவர்களுக்கு உரிய மறுவாழ்வு நடவடிக்கைகள் அளிக்கவும், உடனடி இழப்பீடுகளை வழங்கவும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்தை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் விபத்து நடந்த தண்டவாளப் பகுதி அருகே நேற்று முதல் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை போலீசார் அவர்களை தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். எனினும், சிறிது நேரத்தில் அவர்கள் போலீஸ் மீது கற்களை எறிந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

.