This Article is From Aug 01, 2019

“என்னால் என்ன செய்ய முடியும்?”- ஜொமேட்டோவின் ‘இந்து அல்லாதவரான’ டெலிவரி நபர் வேதனை!

ஃபயிஸுக்கு சாமானிய மக்கள் மட்டுமல்ல, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

“என்னால் என்ன செய்ய முடியும்?”- ஜொமேட்டோவின் ‘இந்து அல்லாதவரான’ டெலிவரி நபர் வேதனை!

ஜபல்பூரில் பணி செய்யும் ஃபயிஸுக்கு, இது எபோதும் போலான வேலைதான்.

ஹைலைட்ஸ்

  • ஜபல்பூரில் பணி செய்து வருகிறார் ஃபயிஸ்
  • முஸ்லிம் உணவு எடுத்து வரக்கூடாது என சொன்னதால் பிரச்னை வெடித்தது
  • உணவை ரத்து செய்தவருக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது

ஜொமேட்டோ உணவு டெலிவரி ஆப் மூலம், அமித் சுக்லா என்னும் நபர், ஃபுட் ஆர்டர் செய்கிறார். அதை கொண்டு போய் கொடுக்கும் பொறுப்பு ஃபயிஸுக்கு வந்து சேர்கிறது. ஜபல்பூரில் பணி செய்யும் ஃபயிஸுக்கு, இது எபோதும் போலான வேலைதான். ஆனால், அவருக்கே தெரியாமல் 2 மணி நேரத்தில் இணைய பேசு பொருளாக மாறுகிறார் ஃபயிஸ். 

அமித் சுக்லா என்னும் அந்த நபர், “ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவை சிறிது நேரத்துக்கு முன்னர் ரத்து செய்தேன். இந்து அல்லாத ஒருவர் மூலம் எனது உணவை அவர்கள் கொடுத்து அனுப்பினர். அவரை மாற்ற முடியாது என்று சொன்னார்கள். ரிஃபண்டு கொடுக்க முடியாது என்றும் சொல்லிவிட்டனர்” என்று ட்விட்டர் மூலம் பகிர்ந்தார். 

தொடர்ந்து அமித் சுக்லா, ஜொமேட்டோ கஸ்டமர் கேருடன் தான் உரையாடியவற்றையெல்லாம் ஸ்க்ரீன்-ஷாட்களாக எடுத்து பகிர்ந்துள்ளார். அமித் சுக்லா, இந்த விவகாரத்தை சும்மா விடப் போவதில்லை என்றும் வழக்கறிஞர்கள் அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அவரின் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்த சொமேட்டோ, “உணவுக்கு மதம் கிடையாது. உணவே மதம்” என்று கூறியுள்ளது. சொமேட்டோவின் இந்த ரிப்ளை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து சொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல், “இந்தியா என்கிற நாடு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்ட்னர்களின் பன்மைத்துவத்தை மதிக்கிறோம். எங்கள் கொள்கைக்கு எதிராக இருக்கும் ஒரு வியாபாரத்தை இழப்பதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை” என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

இது பற்றி தற்போது மனம் திறந்துள்ள ஃபயிஸ், “இது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. ஆனால், நான் என்ன செய்ய முடியும். நான் ஒரு ஏழை. இதைப் போன்ற விஷயங்களையெல்லாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்” என்று நொந்து கொள்கிறார். 

ஃபயிஸுக்கு சாமானிய மக்கள் மட்டுமல்ல, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

(PTI தகவல்களுடன்)

.