This Article is From Dec 11, 2018

‘தமிழகத்துக்கு மீண்டுமொரு புயல் வர வாய்ப்புள்ளதா..?’- வானிலை மையம் என்ன சொல்கிறது

தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதா..?

‘தமிழகத்துக்கு மீண்டுமொரு புயல் வர வாய்ப்புள்ளதா..?’- வானிலை மையம் என்ன சொல்கிறது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நிலவி வரும் நிலையில், மீண்டும் ஒரு புயல் உருவாகி, அது தமிழகத்தைத் தாக்குமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், ‘இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடல் மத்தியப் பகுதியில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக தெற்கு வங்கக் கடல் பகுதி கொந்தளிப்பாக இருக்கக்கூடும். மீனவர்கள், தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அடுத்த 3 நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை வானம், வறண்டு காணப்படும். தமிழகம் மற்றும் புதுவையைப் பொறுத்தவரை, அடுத்த 3 நாட்களுக்குக் குறிப்பிடும்படியான மழை இருக்காது' என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், ‘தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதா..?' என்று கேட்டனர். அதற்கு புவியரசன், ‘இப்போதைக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி கண்காணிப்பில் இருக்கிறது. அது புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்' என்று கூறினார்.

.