This Article is From Jan 23, 2020

மறக்கவேண்டிய நிகழ்வுகளை நினைவூட்டியது ஏன்? ரஜினிகாந்திற்கு வைகோ கேள்வி

தந்தை பெரியார் குறித்து அவதூறாகக் கருத்துக் கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது எதனால்?

மறக்கவேண்டிய நிகழ்வுகளை நினைவூட்டியது ஏன்? ரஜினிகாந்திற்கு வைகோ கேள்வி

தொடங்கி வைத்தது ரஜினிகாந்த்; அவரேதான் இதற்கு முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்

"இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்" என்று மட்டும் கூறும் ரஜினிகாந்த் மறக்கவேண்டிய நிகழ்வுகளை ஏன் இப்போது நினைவூட்டுகிறார்? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த ஜன.14-ஆம் தேதி துக்ளக் இதழின் 50-ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் 1971-இல் சேலத்தில் நடந்த நிகழ்வு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது கருத்து சரிதான் என்றும் தான் எதையும் கற்பனையாக பேசவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறான கருத்துகள் கூறும் எண்ணம் தனக்கு இல்லை என ஏன் ரஜினி சொல்ல மறுக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல; ஓர் இயக்கம். சமுதாயத்தை மாற்ற வந்த இயக்கம். மாற்றம் என்றால் சாதாரண மாற்றமா? பாராட்டிப் போற்றி வளர்த்த பழமை லோகம்; ஈரோட்டுப் பூகம்பத்தால் இடிந்தது.

பூகம்பம் வந்து கோட்டை, கொத்தளங்களைப் புரட்டிப் போட்டது போல், அவை சாதாரண கோட்டைகளா? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அசைந்து கொடுக்காமல் குன்றென நிமிர்ந்து நின்ற கோட்டைகள். 

சமூக நீதிக்காகப் போராடி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர் பெரியார். பெண்ணடிமைக் கோட்பாட்டை அழித்து மகளிர் விடுதலையைச் சாதித்தவர் பெரியார்.

அந்திமக் காலம் நெருங்கிய நிலையிலும், சென்னை தியாகராய நகரில் டிசம்பர் 19, 1973 இல் ஆற்றிய இறுதிப் பேருரையில் தமிழின விடுதலைக்காக டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர முழக்கமிட்டவர் தந்தை பெரியார்.

தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து இருக்கின்ற தலைவர் தந்தை பெரியார் அவர்கள் குறித்து நண்பர் நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் கூறிய கருத்துகளை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆதாரபூர்வமாக மறுத்து இருக்கின்றார்.

அதன்பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் ரஜினிகாந்த், “இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்” என்று மட்டும் கூறுகிறார். மறக்கவேண்டிய நிகழ்வுகளை ஏன் இவர் இப்போது நினைவூட்டுகிறார்? என்ற கேள்வி எழுகிறது!

தந்தை பெரியார் குறித்து அவதூறாகக் கருத்துக் கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது எதனால்? எய்தவர்கள் யார்? என்று தமிழ்நாட்டு மக்கள் நினைப்பது இயற்கையே!

தொடங்கி வைத்தது ரஜினிகாந்த்; அவரேதான் இதற்கு முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

.