This Article is From Mar 14, 2019

'பலமற்ற மோடி, சீன அதிபரைப் பார்த்து அஞ்சுகிறார்!’- விளாசும் ராகுல் காந்தி

மசூத் அசாருக்கு எதிராக, ஐ.நா சபையில் இப்போது கொண்டு வரப்பட்டது போல் ஓர் தீர்மானம், 2016 ஏப்ரல் மாதமும் கொண்டுவரப்பட்டது.

மசூத் அசாருக்கு எதிராக பல நாடுகள் ஐ.நா சபையில் போர்க் கொடி தூக்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

New Delhi:

ஐ.நா சபை மூலம், பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக பட்டியலிட முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சீனா, இப்படி தலையிடுவது நான்காவது முறையாகும். இந்த விவகாரத்தையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்துள்ளார். 

ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பலமற்ற மோடி, சீன அதிபர் ஸி-யைப் பார்த்து பயப்படுகிறார். இந்தியாவுக்கு எதிராக சீனா நடந்து கொண்டால், அது குறித்து ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார் மோடி' என்று பதிவிட்டுள்ளார். 

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக பட்டியலிட நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அந்நாடுகள் அனுப்பியுள்ள கடிதம் NDTV-க்கு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் சீனா எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் அமெரிக்க அதிகாரி, ‘இப்படி சீனா செய்வது நான்காவது முறையாகும். பாதுகாப்பு கவுன்சில் செய்ய வேண்டிய பணிகளை தடுக்கும் வகையில் சீனா நடந்து கொள்ளக் கூடாது. தொடர்ந்து சீனா இதைப் போன்ற நடவடிக்கையில் இறங்குமானால், பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நாடுகள் வேறு வழிகளை கையாள வேண்டியிருக்கும். அதற்கு அவசியம் இருக்காது என நம்புகிறேன்' என்று எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார். 

ட்விட்டரில் ராகுல் காந்தி,

 

 

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய தரப்பு, கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகளின் முயற்சிகளை பாராட்டியுள்ளது இந்தியா. 

மசூத் அசாருக்கு எதிராக பல நாடுகள் ஐ.நா சபையில் போர்க் கொடி தூக்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மசூத் அசார், சர்வதேச தீவிரவாதியாக பட்டியலிடப்படும் பட்சத்தில், அவரின் சொத்துகள் முடக்கப்படும். மேலும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்யவும் அவருக்குத் தடை விதிக்கப்படும். 

மசூத் அசாருக்கு எதிராக, ஐ.நா சபையில் இப்போது கொண்டு வரப்பட்டது போல் ஓர் தீர்மானம், 2016 ஏப்ரல் மாதமும் கொண்டுவரப்பட்டது. அப்போதும் சீனா, அந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டைப் போட்டது. மசூத் அசார்தான் சமீபத்தில் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு முளையாக செயல்பட்டார் என்று சொல்லப்படுகிறது. அந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

டோக்லாம் பகுதியில் சீனப் படைகள் ஆக்கிரமிப்பு செய்தபோது, இந்திய - சீன உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அப்போதிலிருந்து சீனா விவகாரத்தில், தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது பாஜக என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. 

சென்ற ஆண்டு ஜனவரி மாதம், காங்கிரஸ் தரப்பு டோக்லாம் விவகாரம் குறித்து பேசுகையில், ‘டோக்லாம் பகுதியை சீனத் தரப்பு ஆக்கிரமித்தது செயற்கைக்கோள் படங்கள் நமக்கு உணர்த்திவிட்ட போதும், இந்த விவகாரத்தில் பாஜக பெரும் நடவடிக்கையை எதையும் எடுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமானது' என்று குற்றம் சாட்டியது. 


 

 

.