This Article is From Aug 11, 2018

‘மம்தாவை வெளியேற்றுவோம்!- கொல்கத்தாவில் அமித்ஷா பேச்சு

மேற்கு வங்கத்தில் இன்று பாஜக பேரணியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, ‘மம்தாவை வெளியேற்றுவதுதான் எங்கள் குறிக்கோள்’ என்று பேசியுள்ளார்

ஹைலைட்ஸ்

  • வங்கதேச அகதிகள் மம்தாவின் வாக்கு வங்கி, அமித்ஷா
  • மேற்கு வங்கத்தில் இது மாற்றத்துக்கான நேரம், அமித்ஷா
  • மேற்கு வங்கத்தில் பாஜக-வை வளர்க்கும் நோக்கில் இந்தப் பேரணி நடந்துள்ளது
Kolkata:

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று பாஜக பேரணியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, ‘மம்தாவை வெளியேற்றுவதுதான் எங்கள் குறிக்கோள்’ என்று காரசாரமாக பேசியுள்ளார்.

பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் சமீப காலமாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. 

குறிப்பாக ‘அசாம் குடிமக்கள் வரைவு பட்டியல்’ விவகாரம் தொடர்பாக இரு கட்சிக்கும் இடையில் கடுமையான வாதம் நடந்து வருகிறது. குடிமக்கள் வரைவு பட்டியலில் இருந்து, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த மம்தா, ‘இந்த விவகாரம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் ரத்த வெள்ளம் ஓடும். உள்நாட்டுப் போர் வெடிக்கும்’ என்றார்.

அதற்கு அமித்ஷா கடும் கண்டனங்களை தெரிவித்து, ‘அசாம் குடிமக்கள் பதிவேட்டைப் பொறுத்தவரை, அனைத்தும் நீதிமன்ற வழிகாட்டுதல்படியே நடக்கும். தேவையில்லாமல் யாரும் குழப்பம் விளைவிக்க வேண்டாம்’ என்று பதிலடி கொடுத்தார். 

இப்படி இருவருக்கும் இடையில் தொடர்ந்து கருத்து மோதல் நடந்த வருகிறது. இந்நிலையில் திரிணாமூல் கட்சியினரின் கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு இன்று கொல்கத்தா பேரணியில் அமித்ஷா கலந்து கொண்டார். 

அப்போது அவர், ‘இங்கு நாம் வந்திருப்பது மம்தா பானர்ஜியை வெளியேற்றத்தான். அசாம் குடிமக்கள் பட்டியல் குறித்து மம்தா ஒரு கருத்து தெரிவிக்கிறார். வங்கதேசத்திலிருந்து இங்கு வந்து தங்கியுள்ள அகதிகளை நாம் வெளியேற்றக் கூடாதா? ஆனால், மம்தா அவர்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்கிறார். அவர்களை வெளியே அனுப்பினால் மம்தாவின் வாக்கு வங்கி பாதிக்கும். ஆனால், எங்களுக்கோ நாடுதான் முக்கியம். வாக்கு வங்கியைப் பற்றி கவலையில்லை. நீங்கள் எப்படி எதிர்ப்புத் தெரிவித்தாலும், என்.ஆர்.சி குறித்து அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றவர்,

மேலும், ‘துர்கா பூஜைக்கு மம்தா ஆட்சி செய்வதால் பல்வேறு தடைகள் இருந்து வருகின்றன. நாங்கள் ஆட்சியில் அமர்ந்தால் துர்கா பூஜையை கொண்டாட இருக்கும் தடைகள் நீக்கப்படும். மேற்கு வங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் இது’ என்று பேசியுள்ளார். 

.