This Article is From Apr 30, 2020

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் 67 வயதில் காலமானார்!

மும்பையில் வசித்து வந்த அவர் நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் 67 வயதில் காலமானார்!

ரிஷி கபூரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் நேற்று அவரது சகோதரர் ரன்திர் கபூர் தகவல் தெரிவித்திருந்தார்.

New Delhi:

முதுபெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் 67 வயதில் காலமானார். மும்பையில் வசித்து வந்த அவர் நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். ரிஷி கபூரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் நேற்று அவரது சகோதரர் ரன்திர் கபூர் தகவல் தெரிவித்திருந்தார். “ரஷி கபூர் மருத்துவமனையில்தான் உள்ளார். அவர் புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது,” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் நேற்று கூறியிருந்தார் ரன்திர்.

ரஷி கபூரின் மறைவைத் தொடர்ந்து அவரது நீண்ட நாள் நண்பரான அமிதாப் பச்சன், “அவன் சென்றுவிட்டான். ரஷி கபூர் மறைந்துவிட்டான். நான் தகர்ந்துவிட்டேன்,” என்று உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 

ரஷி கபூர், சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ராஜ் கபூர், இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். 

நேற்று பாலிவுட்டின் பிரபல நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் காலமானார். இப்படிப்பட்ட சூழலில் ரிஷி கபூரின் மறைவுச் செய்தி பாலிவுட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

‘பாபி', ‘சாந்தினி' போன்ற பாலிவுட் படங்களுக்காக மிகவும் பிரபலமானவர் ரிஷி கபூர். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ரிஷி கபூருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அவர் சிகிச்சை முடிந்து மும்பைக்குத் திரும்பினார். இந்தியா வந்த பிறகு அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன்! 11 மாதங்கள், 11 நாட்கள்! எல்லோருக்கும் நன்றி,” எனத் தெரிவித்திருந்தார். 

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் இரண்டு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியில் ஒரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகு கபூர், “பிரியமுள்ள குடும்பமே, நண்பர்களே, எதிரிகளே மற்றும் பின் தொடர்பவர்களே. என் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கவலைப்பட்டது நெகிழ்ச்சியளிக்கிறது. நன்றி. கடந்த 18 நாட்களாக நான் டெல்லியில் ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தேன். இங்குள்ள கடும் மாசுவினால் எனக்குத் தொற்று ஏற்பட்டது. அதனால்தான் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்,” என்று தகவல் கொடுத்தார். 

ரிஷி கபூருக்கு நீத்து கபூர் என்னும் மனைவி இருக்கிறார். மேலும் அவருக்கு மகன் ரன்பீர் மற்றும் மகள் ரித்திமா உள்ளனர். கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தி பாடி' மற்றும் ‘ஜூந்தா கஹின் கா' என்னும் படங்களில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் வெளியான ‘தி இன்டெர்ன்' படத்தின் இந்தி ரீமேக்கில் ரிஷி கபூர் நடிக்கவிருந்தார். அவருடன் தீபிகா படுகோன் நடிக்க ஆயத்தமாகியிருந்தார். 
 

.