This Article is From Jul 31, 2019

ராணுவ பயிற்சி பள்ளியை தொடங்கும் ஆர்.எஸ்.எஸ்.! அடுத்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை!!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான வித்யா பாரதி சார்பாக ராணுவ பயிற்சி பள்ளி இயக்கப்படும். இதில் பாதுகாப்பு தொடர்பான கல்வி பயிற்றுவிக்கப்படவுள்ளது.

ராணுவ பயிற்சி பள்ளியை தொடங்கும் ஆர்.எஸ்.எஸ்.! அடுத்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை!!

பள்ளியின் கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

முன்னாள் ராணுவ தலைமை தளபதி ராஜூ பையா நினைவாக உத்தர பிரதேசத்தில் ராணுவ பயிற்சி பள்ளி ஒன்றை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கவுள்ளது. ஏற்கனவே அரசு சார்பில் ராணுவ பயிற்சி பள்ளிகள் நடத்தப்படும்போது புதிதாக இதை ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். 

புலந்த்சாகர் மாவட்டம் ஷிகார்பூரில் தொடங்கப்படவுள்ள இந்த பள்ளிக்கு 'ராஜு பையா சைனிக் வித்யா மந்திர்' என்று பெயர் சூட்டப்படும். ஆர்.எஸ்.எஸ்.-ன் கல்வி பிரிவான வித்யா பாரதி இந்த பணிகளை கவனிக்கும். 

இந்த பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட முறை கடைபிடிக்கப்படும். 6-12 வகுப்புகள் வரைக்கும் மாணவர்கள் மட்டுமே இதில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். வகுப்புகள் 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஏக்கர் நிலரப்பரப்பில் பள்ளியை கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நலத்தை முன்னாள் ராணுவ வீரர் சவுத்ரி ராஜ்பால் சிங் இலவசமாக வழங்கியுள்ளார். 

ஏற்கனவே நாடு முழுவதும் வித்யா பாரதி சார்பாக 20 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், 'நாட்டில் ஏற்கனவே 5 ராணுவ பயிற்சி பள்ளிகள் இருக்கின்றன. 2 ராஜஸ்தானிலும், 2 கர்நாடகாவிலும், ஒன்று இமாச்சல பிரதேசத்திலும் செயல்பட்டு வருகிறது. 


அரசால் இந்த பள்ளிகள் நடத்தப்பட்டு வரும்போது ஆர்.எஸ்.எஸ். எதற்காக ராணுவ பயிற்சி பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்?. அரசியல் ஆதாயங்களுக்காக இதனை ஆர்.எஸ்.எஸ். செய்கிறது. இங்கு பயிற்சி எடுப்பவர்களுக்கு எப்படி கும்பல் கொலை செய்ய வேண்டும் என்று கற்றுத் தரப்படலாம். இது சமூக அமைதியை சீர்குலைக்கும் செயல்' என்று கூறியுள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.