This Article is From Jul 09, 2020

“விரைவில் சில அதிரடி நடவடிக்கைகள்..!”- சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி; பின்னணி என்ன?

இது குறித்து வெள்ளை மாளிகை செயலர், கேலே மெக்யினானி விளக்கம் கொடுத்துள்ளார்

“விரைவில் சில அதிரடி நடவடிக்கைகள்..!”- சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி; பின்னணி என்ன?

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராபர்ட் ஓபிரியனும் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் விவகாரதிதல் இரு நாடுகளிடையே மோதல் அதிகரிப்பு
  • டிரம்ப், தொடர்ந்து சீனாவுக்கு எதிராக பேசி வருகிறார்
  • சீன செயலிகளை அமெரிக்கா தடை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது
Washington:

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது முதலே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட அரசு பிரதிநிதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஹாங் காங்கிற்கு எதிராக சீனா எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அமெரிக்கத் தரப்புக் கண்டித்து வருகிறது. இப்படியான சூழலில்தான், விரைவில் சீனாவுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து வெள்ளை மாளிகை செயலர், கேலே மெக்யினானி, பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “சீனா மீது எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து அதிபருக்கு முன்னதாக முந்திக் கொண்டு சொல்ல விரும்பவில்லை. ஆனால், அது குறித்து நீங்கள் விரைவில் அறிவீர்கள். அது மட்டும் உறுதி” என வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். 

அதேபோல அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராபர்ட் ஓபிரியன், “வரும் வாரங்களில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க அரசு எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும். சீனாவுக்கு எதிராக இப்படியான கறார் நடவடிக்கைகளை இதற்கு முன்னர் எந்த அமெரிக்க அதிபரும் எடுத்ததில்லை. நமக்கு வர்த்தக ரீதியாக இழைத்த வந்த அநீதிக்கு எதிராக சீனா மீது பல கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப்தான்.

சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளின் செயல்பாடுகளை அதிபர் டிரம்ப் உன்னிப்பாக பார்த்து வருகிறார். இந்த செயலிகளின் மூலம் அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை எடுத்து வருகிறது சீனா,” எனக் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் அவர் இப்படிப் பேசியுள்ளார்

மேலும் அவர், “ஹாங் காங் பிரச்னையை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு உள்ள மக்கள் சீன அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் செய்தனர். ஆனால் அதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சீனா மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சீனா எடுக்கும் நடவடிக்கைகள் வெறுமனே ஹாங் காங்கை மட்டும் பாதிக்கவில்லை. அது உலகையே பாதிக்கும் வகையில்தான் உள்ளது,” எனக் கூறியுள்ளார். 

இந்தக் கருத்துகளை ஆதரிக்கும் வகையில், அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதி, மேட் கேட்ஸ், “சீனா நம் எதிரி என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அமெரிக்கா சீனாவுக்கு எதிரான கறார் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். 

நம் பணத்தைக் கொடுத்து சீனாவின் நிறுவனங்களை வளர்த்து விடக் கூடாது. அமெரிக்காவில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கவே கூடாது,” என எச்சரிக்கும் தொனியில் ட்வீட் பதிவிட்டுள்ளார். 


 

.