This Article is From Mar 03, 2020

இனப்படுகொலை குறித்து விசாரிக்க விசாரணை அமைப்பை ஐ.நா. உருவாக்க வேண்டும்: திருமாவளவன்

கோத்தபய ராஜபக்ச தற்போது அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது.

இனப்படுகொலை குறித்து விசாரிக்க விசாரணை அமைப்பை ஐ.நா. உருவாக்க வேண்டும்: திருமாவளவன்

இனப்படுகொலை குறித்து விசாரிக்க விசாரணை அமைப்பை ஐ.நா. உருவாக்க வேண்டும்: திருமாவளவன்

ஹைலைட்ஸ்

  • விசாரணை அமைப்பை ஐ.நா. உருவாக்க வேண்டும்
  • மீண்டும் இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
  • ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கையின் முடிவுக்கு அனுமதிக்கக் கூடாது

இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரிக்கச் சுயேச்சையான விசாரணை அமைப்பை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உருவாக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2009 ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக ஒரு விசாரணைப் பொறியமைவை உருவாக்க 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை அரசும் இருந்தது. 

'அவ்வாறு தாங்கள் பங்கேற்று நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து வெளியேறுகிறோம், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்' என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இது மீண்டும் இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஐநா மனித உரிமைக் கவுன்சில் அனுமதிக்கக் கூடாது. இலங்கை இனப்படுகொலைகள் குறித்து சுயேச்சையான விசாரணை அமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தற்போது புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ஐநா மனித உரிமை கவுன்சிலில் 'இலங்கை அரசு ஒப்புக்கொண்ட எதையும் நிறைவேற்றப் போவதில்லை, அந்த தீர்மானத்திலிருந்து வெளியேறுகிறோம்' என்று அறிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த கோத்தபய ராஜபக்ச தற்போது அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை அரசின் நடவடிக்கை அமைந்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் வெறுமனே வருத்தம் தெரிவித்ததோடு நின்றுவிடாமல் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முன்வர வேண்டும். இலங்கை அரசு அந்த தீர்மானத்திலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் சுயேச்சையான விசாரணை  ஒன்றை அமைத்து இலங்கை இனப்படுகொலை குறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்,

இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகிவிடும். அதற்கு ஐநா மனித உரிமை கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

.