This Article is From Jun 12, 2020

அமெரிக்காவில் அதிகரித்த வேலையிழப்பு… H-1B விசாக்களை சஸ்பெண்டு செய்யும் டிரம்ப்..!?

இப்படி ஒரு புறம் தகவல்கள் வந்த கொண்டிருக்கும் நிலையில், வெள்ளை மாளிகை தரப்பு, விசாக்கள் வழங்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. 

அமெரிக்காவில் அதிகரித்த வேலையிழப்பு… H-1B விசாக்களை சஸ்பெண்டு செய்யும் டிரம்ப்..!?

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து H-1B விசா மூலம் அங்கு வேலை பார்த்து வந்த பல இந்தியர்கள் தங்களின் பணியை இழந்தனர்.

ஹைலைட்ஸ்

  • இந்திய ஐடி ஊழியர்கள் H-1B விசாவை அதிகம் பயன்படுத்துகிறார்கள்
  • தற்போது H-1B விசா மூலம் சென்றுள்ளவர்களுக்கு பாதிப்பில்லை எனத் தகவல்
  • அக்டோபர் மாதம் இந்த அதிரடி உத்தரவு அமலுக்கு வர வாய்ப்புள்ளது
Washington:

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டில் வேலையிழப்பு உச்சத்தத் தொட்டுள்ளது. இதையடுத்து வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு விசாக்களை சஸ்பெண்டு செய்ய அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் யோசித்து வருவதாக தகவல் வந்துள்ளது. இந்திய ஐடி ஊழியர்களால் அதிகம் பெறப்படும் H-1B விசாக்களும் இதில் அடங்கும். டிரம்ப் விசாக்களுக்கு எதிராக முடிவெடுத்தால், அது இந்தியர்களைப் பெருமளவு பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த விவகாரம் குறித்த தகவலை, பிரபல செய்தி நிறுவனம் வால் ஸ்ட்ரீன் ஜர்னல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில், அக்டோபர் 1 ஆம் தேதி நிதி ஆண்டு தொடங்கும். எனவே வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த ‘விசா உத்தரவு' அமலுக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது. 

வால் ஸ்ட்ரீட் ஜர்னல், “விசா குறித்தான உத்தரவு வந்தால், புதிதாக H-1B விசா மூலம் யாரும் அமெரிக்காவுக்கு வர முடியாது. அதே நேரத்தில் அமெரிக்காவில் ஏற்கெனவே இருக்கும் நபர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது” என்று தகவல் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து H-1B விசா மூலம் அங்கு வேலை பார்த்து வந்த பல இந்தியர்கள் தங்களின் பணியை இழந்தனர். இதனால் பலரும் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். 

இப்படி ஒரு புறம் தகவல்கள் வந்த கொண்டிருக்கும் நிலையில், வெள்ளை மாளிகை தரப்பு, விசாக்கள் வழங்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. 

“அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு செயல் திட்டங்களை எங்கள் வல்லுநர்கள் குழு ஆராய்ந்து வருகிறது. ஆனால், இதுவரை எந்தவித கறார் முடிவுகளும் எடுக்கப்படவில்லை” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஹோகன் ஜிட்லி கூறியுள்ளார். 

விசா தொடர்பான உத்தரவு அமலுக்கு வந்தால் H-1B விசாக்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. குறைந்த காலத்துக்கு அமெரிக்காவில் பணி செய்யும் H-2B விசா வைத்திருக்கும் நபர்கள், குறைந்த கால பணி செய்யும் J-1 விசா வைத்திருக்கும் நபர்கள், நிறுவன டிரன்ஸ்ஃபர் மூலம் சென்றவர்களுக்கு கொடுக்கப்படும் L-1 விசா நபர்கள் உள்ளிட்டவர்களும் பாதிக்கப்படுவார்கள். 

இது குறித்து அமெரிக்காவின் சாம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் சிஇஓ, தாமஸ் டோன்ஹியூ, “அமெரிக்காவின் பொருளாதாரம் மீட்சியடையும்போது, வேலைக்குத் தேவைப்படும் பணியாட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். உள்ளூரிலும் வெளிநாடுகளில் இருந்தும் தகுதியான நபர்கள் பணிக்குத் தேவைப்படுவார்கள்” என்று விசா குறித்தான நடவடிக்கை எடுக்கப்பட்டால் வரும் பாதிப்பு பற்றி தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். 

டோன்ஹியூ, L-1 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்க தொழில்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது பற்றி டோன்ஹியூ கூறும்போது, “புதிய விதிமுறைகள் மூலம் புலம் பெயராத ஊழியர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டால், அது பல தொழில்களுக்கு சரியான ஆட்கள் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும். இதன் மூலம் அமெரிக்க பொருளாதாரம் முடங்கி வேலைவாய்ப்பு உருவாக்குவது தடைபடும்,” என்றுள்ளார். 

.