This Article is From Jul 11, 2019

“6 மணிக்கு முன்னர் சபாநாயகரை சந்தியுங்கள்!”- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தரவு

கடந்த சனிக்கிழமை, அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பெங்களூருவில், சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்பித்தனர்.

உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் முன்னிலையில் இன்று 6 மணிக்குள் அனைத்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் ஆஜரவார்கள் என்று தெரிகிறது.

New Delhi:

கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சட்டசபை சபாநாயகர் இடத்தில் கடிதம் அளித்திருந்தனர். அந்தக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று கூறி, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி அரசைக் காப்பாற்றவே, சபாநாயகர், ராஜினாமாவை ஏற்கவில்லை என்று அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அதைத் தொடர்ந்துதான், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், சபாநாயகர் முன்னர், எம்.எல்.ஏ-க்கள் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் முன்னிலையில் இன்று 6 மணிக்குள் அனைத்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் ஆஜரவார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அவர்கள் ராஜினாமா குறித்து முடிவெடுத்து சபாநாயகர் நீதிமன்றத்தில் தெரிவிக்க  வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

கடந்த சனிக்கிழமை, அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பெங்களூருவில், சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்பித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மும்பைக்கு விமானம் மூலம் புறப்பட்டனர். 

இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார், “எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கும்போது நான் அலுவலகத்தில் இல்லை. செவ்வாய் கிழமைதான் அவர்களின் கடிதங்களைப் பார்த்தேன். ஜூலை 17 ஆம் தேதி அவர்களை நேரில் ஆஜராக சொல்லி தெரிவித்துள்ளேன்” என்று கூறியுள்ளார். 

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், முகுல் ரோத்தகி, “சபாநாயகர், யாரையும் சந்திக்காத வண்ணம் தன்னை வைத்துக் கொண்டார். அவரது கடமையை சரிவர செய்யவில்லை.” என்று கூறினார். நீதிமன்றத்திலும் ரோத்தகி, அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரைப் பார்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று வாதாடினார். 

கடந்த சனிக்கிழமை மட்டும், ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணியிலிருந்த 11 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து மேலும் 4 எம்.எல்.ஏ-க்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் எந்த ராஜினாமாவையும் சபாநாயகர் இதுவரை ஏற்கவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படும் பட்சத்தில், பாஜக-வுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும். 


 

.