This Article is From Jan 21, 2019

“மக்களிடம் விளக்குங்க..!”- ‘யாக’ விவகாரத்தில் திருமா சீற்றம்

இதில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை அதிமுக தரப்பு மறுத்து வருகிறது

“மக்களிடம் விளக்குங்க..!”- ‘யாக’ விவகாரத்தில் திருமா சீற்றம்

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில், நேற்று அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை அதிமுக தரப்பு மறுத்து வருகிறது.

இந்தப் பிரச்னையை முதலாவதாக எழுப்பிய எதிரகட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு, மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் ஒரு கட்டடத்தில் யாகம் வளர்த்துள்ளீர். இது வெட்கக்கேடானது. கோயிலிலோ, ஜெயலலிதா சமாதியிலோ சென்று நீங்கள் எதைச் செய்தாலும், அது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், தலைமைச் செயலகத்தில் எப்படி யாகம் வளர்க்க முடியும்” என்று கொதித்தார்.

இதைத் தொடர்ந்து பேசியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “தலைமைச் செயலகக் கட்டடத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் வளர்த்திருப்பதாக வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இது மரபு மீறலாகும். முதல்வரும், துணை முதல்வரும் இது குறித்து மக்களிடத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பன்னீர்செல்வமே செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “முதலமைச்சராக ஆவதற்கு யாகம் நடத்தினால் போதும் என்கிற நியதி இருந்தால், அதனால் முதலமைச்சராக முடியும் என்ற சக்தியிருந்தால், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அப்படிப்பட்ட யாகத்தை நடத்துவார்கள். ஆகவே, ஸ்டாலினுக்கு இந்த மூட நம்பிக்கையில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன்” என்று மழுப்பலான பதிலை சொன்னார். தொடர்ந்து ‘யாக விவகாரம்' பூதாகரமாகி வருகிறது.

.