This Article is From May 22, 2020

கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது: ஸ்டாலின்

நூறு நாட்கள் அமைதி வழியில் போராடிய மக்களை அடித்துக் கலைக்கத் திட்டமிட்டு வன்முறையை விதைத்து, 'இனி இந்தப் போராட்டம் தொடரக்கூடாது' என்ற பயத்தை ஏற்படுத்தவே, ஏதுமறியாத 13 பேரின் உயிர்கள் பலியாக்கப்பட்டன.

கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது: ஸ்டாலின்

கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது: ஸ்டாலின்

கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயவே ஓயாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் மேலும் கூறியதாவது, இன்று மே 22 - அப்பாவிப் பொதுமக்கள் மீது, அநியாயமாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆண்டுகள் இரண்டு ஓடினாலும், அந்தத் துப்பாக்கிச் சூட்டினால் வடிந்த இரத்தம் காய்ந்து விட்டாலும், ஏற்பட்ட கொடுங்காயங்கள் ஆறிவிட்டாலும், அதனால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடு மட்டும் மாறாது; தீராது.

அதனால் அதிமுக ஆட்சியாளர் கரங்களில் ஏற்பட்ட ரத்தக் கறையை, மகாகவி ஷேக்ஸ்பியர் சொல்லியிருப்பதைப் போல, கடல் நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் கறை போகாது. அந்தச் சோக சம்பவத்தில் துப்பாக்கிச் சூடுபட்ட தாளமுத்து நகரைச் சேர்ந்த 31 வயது நெல்சன், தன்மீது பாய்ந்த குண்டை அறுத்து அகற்றினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று டாக்டர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்று, துப்பாக்கிக் குண்டை உடலில் தாங்கி, இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்.

எதிரி நாட்டு இராணுவம் சுடுவதைப் போல, இரக்கம் சிறிதும் இன்றி கொடூர மனதுடன், சொந்த நாட்டு மக்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் நடத்திய குண்டு வேட்டைச் சத்தம் இப்போதும் எதிரொலித்துக் கொண்டு தான் இருக்கிறது; அந்தப் பகுதி மக்களின் உறக்கத்தை அனுதினமும் கலைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

‘நானே உங்களை மாதிரி மீடியாவைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன்' என்று, பச்சைப்படுகொலையை விட மோசமான பொய்யை மீடியாக்கள் முன்னால் பழனிசாமிச் சொல்லிக் கொண்டிருந்ததையும், அவரது கல் நெஞ்சத்தையும் இன்னமும் மக்கள் மறக்கவில்லை.

நூறு நாட்கள் அமைதி வழியில் போராடிய மக்களை அடித்துக் கலைக்கத் திட்டமிட்டு வன்முறையை விதைத்து, 'இனி இந்தப் போராட்டம் தொடரக்கூடாது' என்ற பயத்தை ஏற்படுத்தவே, ஏதுமறியாத 13 பேரின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. இந்தப் பழியை எத்தனை ஆண்டுகளானாலும் பழனிசாமி அரசாங்கத்தால் துடைத்துக் கொள்ள முடியாது.

மக்களை அமைதிப்படுத்தவும் திசை திருப்பவும் விசாரணை ஆணையம் என்ற நாடகத்தை அரங்கேற்றி, அடுத்த கொடும்பழியை வாங்கிக் கட்டிக் கொண்டது அதிமுக. அரசு. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை இதுவரை வரவில்லை. அந்த ஆணையம் உண்மையில் சுட்டிக் காட்ட வேண்டிய குற்றவாளிகள் கோட்டையில் அல்லவா இருக்கிறார்கள்?

கொள்ளையுடன் சேர்ந்து கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நாட்டுக்கு நிரூபித்த நாள் இன்று! தென் பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயவே ஓயாது! என்று அவர் தெரிவித்துள்ளார்.

.