This Article is From Jun 01, 2019

லோக்சபா தேர்தலில் தோல்வி… உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி… கர்நாடகா காங். மகிழ்ச்சி!

மே 29 ஆம் தேதி கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

லோக்சபா தேர்தலில் தோல்வி… உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி… கர்நாடகா காங். மகிழ்ச்சி!

61 நகர்ப்புற அமைப்புகளில் இருக்கும் 1,300 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது.

Bengaluru:

கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் பெரு வாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இருவரும் உள்ளாட்சித் தேர்தலை தனித் தனியே சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

மே 29 ஆம் தேதி கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 61 நகர்ப்புற அமைப்புகளில் இருக்கும் 1,300 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. அதில் 509 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. ம.ஜ.த 174 இடங்களையும், பாஜக 366 இடங்களையும், சுயேட்சைகள் 160 இடங்களையும் கைப்பற்றின. 

கர்நாடகாவில் மொத்தம் இருக்கும் 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த, தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றியடைந்தன. பாஜக, 25 இடங்களைக் கைப்பற்றியது. 

தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசுதான் ஆட்சி புரிந்து வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டது. மாநிலத்தில் பாஜக-வும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருவதாக தொடர்ந்து தகவல்கள் கசிந்து வருகின்றன.  இதனால் அரசு கவிழும் வாய்ப்பு கூட இருப்பதாக பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கூட்டணிக்கு ஆறுதலான செய்தியாக வந்துள்ளது. 

“உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல ஆதரவு இருப்பதை காண்பிக்கிறது” என்று அக்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். கர்நாடக காங்கிரஸும், “காங்கிரஸுக்கு ஆதரவளித்தமைக்கு கர்நாடக மக்களுக்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக நாங்கள் நடந்து கொள்வோம்” என்று ட்வீட்டியுள்ளது. 

கடந்த ஆண்டு 105 நகர்ப்புற அமைப்புகளில் உள்ள உள்ளாட்சி இடங்களுக்குப் போட்டி நடைபெற்ற போது, காங்கிரஸ் 982 இடங்களிலும், பாஜக 929 இடங்களிலும், ம.ஜ.த 375 இடங்கிளிலும் வெற்றி பெற்றன. 

.