This Article is From Mar 31, 2019

திமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை - மு.க.அழகிரி

திமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்று மு.க.அழகிரி விமர்சித்துள்ளார்.

திமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை - மு.க.அழகிரி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவரும் மதுரையில் தனது பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, ஒரு வேட்பாளராக மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு மு.க.அழகிரி ஆதரவு கிடைக்குமா என்று பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தது.

இதுகுறித்து மு.க.அழகிரி கூறும்போதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்னை சந்தித்து பேசியதும் ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகில் நடந்த தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மு.க.அழகிரி, விழாவில் பேசியதாவது, திமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் இப்போது உள்ள மாவட்ட செயலாளர்கள் சம்பளம் வாங்கி கொண்டு பினாமிகள் போல் பணியாற்றுகின்றனர். அந்தநிலை எல்லாம் மாற வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறேன்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர், தொண்டர்கள் அனைவரையும் உடன்பிறப்புகள் போல் எப்படி பாசமாக வைத்திருந்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள் என்று அவர் கூறினார்.

.