This Article is From Jan 30, 2020

எல்கேஜியில் சேர்ப்பதற்கே தேர்வு இருக்கும்போது.. அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி

3 வயது குழந்தைக்கே தேர்வு வைக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டு நீங்கள் தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கிறார்கள். 

எல்கேஜியில் சேர்ப்பதற்கே தேர்வு இருக்கும்போது.. அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி

எல்கேஜியில் சேர்ப்பதற்கே தனியார் பள்ளியில் தேர்வு வைத்து தான் சேர்க்கிறார்கள் - செங்கோட்டையன்

தனியார் பள்ளியில் எல்கேஜியில் சேர்ப்பதற்கே குழந்தைகளுக்கு தேர்வு இருக்கும் போது, கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரம் உயர வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். 

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முறையால், உளவியல் ரீதியான பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது, அவர் கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவரிடன் உங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்த்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அந்த நிருபர், மெட்ரிக்குலேஷனில் என்கிறார்.

பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளியில் இவ்வளவு சலுகைகள் இருக்கும் போதும் மெட்ரிக்குலேஷனில் சேர்த்துள்ளீர்கள் என்றார். தொடர்ந்து, பேசிய அவர், 3 வயது குழந்தையை எல்கேஜியில் சேர்ப்பதற்கே தனியார் பள்ளியில் தேர்வு வைத்து தான் சேர்க்கிறார்கள். அப்படி, 3 வயது குழந்தைக்கே தேர்வு வைக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டு நீங்கள் தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கிறார்கள். 

ஆனால், ஏழை, எளிய மக்கள், கிராமப்புறங்களில் இருப்பவர்களின் கல்வித் தரம் உயர வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என நீங்கள் தான் யோசனை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். 

5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது என்பது அவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல். இந்த நடவடிக்கை என்பது பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும், மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வருவதை தடுத்துவிடும். 

அதனால், தமிழக அரசு இந்த புதிய நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், எதையும் பொருட்படுத்தாத தமிழக அரசு தான் எடுத்த முடிவில் திட்டவட்டமாக இருந்து வருகிறது. 

.