This Article is From Mar 02, 2019

அல்-கய்தா அமைப்பின் அடுத்த தலைவர் இவரா..?- ஐ.நா அதிர்ச்சித் தகவல்

ஹம்சா, அல்-கய்தா அமைப்புக்கு சீக்கிரமே தலைவராக பொறுப்பேற்கக் கூடும் என்று சொல்கிறது ஐ.நா

அல்-கய்தா அமைப்பின் அடுத்த தலைவர் இவரா..?- ஐ.நா அதிர்ச்சித் தகவல்

கடந்த வெள்ளிக் கிழமை சவுதி அரேபிய அரசு, ஹம்சா பின் லாடனின் குடியுரிமை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தது

ஹைலைட்ஸ்

  • ஹம்சாவுக்கு, பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது
  • ஹம்சா பின் லாடனின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன
  • ஹம்சா குறித்து துப்பு கொடுத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு: அமெரிக்கா
United Nations:

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், அல்-கய்தா தீவிரவாத அமைப்பின் அடுத்த தலைவர் ஹம்சா பின் லாடனாக இருப்பார் என்று அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறியுள்ளது. ஹம்சா, அல்-கய்தா அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின் லாடனின் மகன் ஆவார். தற்போது அந்த அமைப்புக்கு அய்மன் அல்-ஜவாரி தலைவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஹம்சா, அல்-கய்தா அமைப்புக்கு சீக்கிரமே தலைவராக பொறுப்பேற்கக் கூடும் என்று சொல்லும் ஐ.நா, அவருக்குப் பயணம் செய்யத் தடை விதித்துள்ளது. மேலும், அவரது சொத்துகளையும் முடக்கியுள்ளது. 

29 வயதாகும் ஹம்சா பின்-லாடன் குறித்து ஐ.நா அமைப்பு இப்படியொரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்ட அதே நாளில்தான், அவர் குறித்து துப்பு கொடுத்தால் 1 மில்லியன் டாலர் வரை பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு தரப்பு அறிவித்துள்ளது. 

கடந்த வெள்ளிக் கிழமை சவுதி அரேபிய அரசு, ஹம்சா பின் லாடனின் குடியுரிமை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதே நேரத்தில் ஐ.நா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘அல்-ஜவாரி, ஹம்சா பின் லாடனை, அல்-கய்தா அமைப்பின் தலைவராக அறிவித்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளது. 

முன்னதாக ஹம்சா பின் லாடன் குறித்த துப்புக்கு பரிசு அறிவித்த அமெரிக்க தரப்பு, ‘கடந்த 2015, ஆகஸ்ட் மாதம் முதல் ஹம்சா பின் லாடன், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவரது ஆதரவாளர்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்துமாறு ஹம்சா தூண்டி வருகிறார். 2011 ஆம் ஆண்டு, தனது தந்தை ஒசாமா பின் லாடனை கொன்றதற்கு பழி தீர்ப்பேன் என்றும் அவர் கூறி வருகிறார்' என்று தெரிவித்தது. 

ஜனவரி 2017 ஆம் ஆண்டே, அமெரிக்க அரசு, ஹம்சா பின் லாடனை சர்வதேச தீவிரவாதி என்று அறிவித்தது. அவர் சார்பில் அமெரிக்காவில் இருக்கும் அனைத்து சொத்துகளையும் அமெரிக்கா முடக்கியது. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அரசு தரப்பு உத்தரவிட்டுள்ளது. 

 

மேலும் படிக்க - பின்லேடன் மகனை பிடித்தால் 1 மில்லியன் டாலர் பரிசு: அமெரிக்கா

.