This Article is From Jul 31, 2019

விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்! வெட்டு குத்தில் முடிந்த சோகம்!

இருதரப்பு ரசிகர்களிடையே மோதல்கள் ஏற்படுவதும் வழக்கமாகி இருக்கிறது.

விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்! வெட்டு குத்தில் முடிந்த சோகம்!

ஹைலைட்ஸ்

  • சென்னை புழலில் இந்த சோகச் சம்பசம் நடந்துள்ளது
  • தாக்குதலில் ஈடுபட்ட விஜய் ரசிகர் சிறையில் அடைப்பு
  • பாதிக்கப்பட்ட அஜித் ரசிகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

சென்னையை ஒட்டியுள்ள புழல் பகுதியில் நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசிய அஜித் ரசிகரை கத்தியால் குத்திய விஜய் ரசிகர் சிறையில் அடைப்பு.

அஜித் ரசிகர் எனக் கூறப்படும் உமாசங்கர் என்பவர், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் ரசிகர் எனக் கூறப்படும் ரோஷன் என்பவரிடம் நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரோஷன், உமா சங்கரின் தலை, தோள்பட்டை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியைக்கொண்டு சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த உமாசங்கருக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், ரோஷனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஷன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மொழி மாநிலங்களிலும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள். ஒவ்வொருமுறையும் இவர்களது படம் வரும் போது. ரசிகர்கள் கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது போன்ற வேலைகளில் தீவிரம் காட்டுவது வழக்கம். அதேபோல் இருதரப்பு ரசிகர்களிடையே மோதல்கள் ஏற்படுவதும் வழக்கமாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் எல்லை மீறிய பேச்சும், நாகரீகம் அற்ற முறையில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் போக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அரசியல் அறிவும், சமூக தெளிவும் பெற்றிருக்க வேண்டிய இளைஞர்கள் இவ்வாறான மோதல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

.