This Article is From Mar 19, 2020

தமிழகத்தில் 2வது நபருக்கு கொரோனா பாதிப்பு: சமூக பரிமாற்றமாக மாறுகிறதா?

வெளிநாட்டிலிருந்து வந்தவராக இல்லாமல், டெல்லியிலிருந்து பயணம் செய்து வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது சமூக பரிமாற்றமாக உருவெடுத்துள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2வது நபருக்கு கொரோனா பாதிப்பு: சமூக பரிமாற்றமாக மாறுகிறதா?

எனினும், அதிகாரிகள் இதனை சமூக பரிமாற்றமாக ஏற்க மறுக்கின்றனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரிமாற்றமாக மாறுகிறதா?
  • அதிகாரிகள் இதனை சமூக பரிமாற்றமாக ஏற்க மறுக்கின்றனர்.
  • அனைவரையும் சோதனை செய்வதே தற்போதைய கட்டாய தேவை

தமிழகத்தில் இரண்டாவது நபராக, டெல்லியிலிருந்து சென்னை வந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, அந்த இளைஞர் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டிலிருந்து வந்தவராக இல்லாமல், டெல்லியிலிருந்து பயணம் செய்து வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது சமூக பரிமாற்றமாக உருவெடுத்துள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. எனினும், அதிகாரிகள் இதனை சமூக பரிமாற்றமாக ஏற்க மறுக்கின்றனர். 

இதுதொடர்பாக சுகாதார செயலாளர் மருத்துவர் பீலா ராஜேஷ் என்டிடிவியிடம் கூறும்போது, டெல்லியில் இந்த இளைஞர், வெளிநாட்டுப் பயண வரலாற்றைக் கொண்ட ஒரு நபருடன் தொடர்பிலிருந்துள்ளார். இதுபோன்று பலர் புகாரளித்தால் மட்டுமே நாங்கள் அதனை சமூக பரிமாற்றமாகக் கருத முடியும் என்றார். மேலும், நாங்கள் தற்போது அந்த இளைஞருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடித்து வருகிறோம் என்றார். 

தமிழகத்தில் முதலாவதாக, ஓமனிலிருந்து திரும்பி வந்த 45வயது பொறியாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர் சிகிச்சையைத் தொடர்ந்து, அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இல்லை எனச் சோதனையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பதிவில், அவர் நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சியான திமுக, பயண வரலாறு இல்லாதவர்களையும் சோதனைக்கு உட்படுத்தும் வகையில், சோதனையை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, இந்த நிலையை சமாளிக்கத் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

இதுகுறித்து திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா என்டிடிவியிடம் கூறியதாவது, சாதாரண நிலையிலிருந்து, சமூக பரிமாற்றமாக மாறியுள்ளது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அனைவரையும் சோதனை செய்வதே தற்போதைய கட்டாய தேவை. ஒவ்வொரு மாவட்டத்திலும், போர்க்கால அடிப்படையில், சோதனை மையங்களை அமைக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். 

குறைவான அளவிலே சோதனை மேற்கொள்வது சமூக பரவலுக்கு வழிவகுக்கும், இது ஒரு தொற்றுநோயாக மாறும். மேலும், சுகாதார வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

தமிழகத்தில் தற்போது, சர்வதேச நாடுகளிலிருந்து திரும்பிய 1.89 லட்சம் பேர்  சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில், அறிகுறிகள் உள்ள 222 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில், 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 166 பேருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், 54 பேரின் மாதிரிகள் சோதனையில் உள்ளது. கிட்டத்தட்ட 3,000 பேர் வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள நிலையில், கொரோனாவின் இரண்டாம் கட்டத்தில் இந்தியா உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் நிலை என்பது பாதிக்கப்பட்ட நபர்களிடம் தொடர்பில் உள்ளவர்களுக்குப் பரவுவது. 

உதாரணமாக, வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் உறவினர்கள் அல்லது அறிமுகமானவர்களுக்குப் பரவுவது. இந்த நிலையில் குறைவான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய முடியும். இதன்மூலம், பொது வெளியில் உள்ளவர்களுக்குப் பரவக் கூடிய சாத்திய கூறுகளைக் கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும். 

மூன்றாம் நிலையானது சமூக பரிமாற்றம் (community transmission) எனப்படும் சமுதாயத்தில் உள்ள பலருக்கும் பரவுவது. ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பே இல்லாத ஒருவருக்குப் பரவுவதும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நாட்டிற்கும் செல்லாத நிலையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுவதும் ஆகும். 

மூன்றாம் நிலையில் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதை அடையாளம் காணுவது கடும் சவாலானது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் தற்போது மூன்றாம் கட்டத்தில் உள்ளன.

நான்காம் கட்டம் என்பது கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் நிலையாகும். இது மிக மோசமான கட்டம். இந்த நோய் ஒரு தெளிவான இறுதி புள்ளி இல்லாத, தொற்றுநோய் வடிவத்தை எடுக்கிறது. உயிர்க்கொல்லி வைரஸ் முதலில் உருவானதாகக் கூறப்படும் சீனாவில் அதுதான் நடந்தது.

.