This Article is From Jan 10, 2020

நற்சான்றிதழுக்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

மத்திய பா.ஜ.க அரசு தான் இந்தியாவிலேயே குற்றச் செயல்களுக்கான நிகழ்வில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிற தமிழகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

நற்சான்றிதழுக்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

மத்திய பா.ஜ.க அரசு வழங்கிய நற்சான்றிதழுக்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார். 

இந்தியாவிலேயே நல்லாட்சி நடத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று மத்திய பாஜக அரசின் பணியாளர் நலத்துறை சமீபத்தில் நற்சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில், தகுதியற்ற மாநிலமாக திகழும் தமிழகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நற்சான்றிதழுக்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதற்கு 2018ம் ஆண்டிற்கான குற்ற நிகழ்வுகள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2018ம் ஆண்டில் நடந்த தற்கொலை நிகழ்வுகளில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்தபடியாக, உடல்நலக் குறைவு காரணமாக 3,034, குடும்பப் பிரச்னைகள் காரணமாக 6,433 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் மொத்த தற்கொலைகளில் 10.3 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுவதாக புள்ளி விவரம் கூறுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 3,162 பேர் தற்கொலை செய்து கொண்ட முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் இத்தகைய தற்கொலைகளில் 13 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. காவல் நிலையச் சிறைக் கைதுகளில் 12 பேர் இறந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நல்லாட்சி நடைபெறுகிறது என்று மத்திய பா.ஜ.க அரசு நற்சான்றிதழ் வழங்குவதை விட கேலிக் கூத்தானது வேறு எதுவும் இருக்க முடியாது. சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் அடிப்படையில் கருத்துரிமைக்காக போராடுகிற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது, காட்டுமிராண்டித்தனமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இத்தகைய அராஜகப் போக்கு கொண்ட மத்திய பா.ஜ.க அரசு தான் இந்தியாவிலேயே குற்றச் செயல்களுக்கான நிகழ்வில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிற தமிழகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதைவிட உண்மைக்குப் புறம்பான நகைப்பிற்குரிய செயலை பா.ஜ.கவைத் தவிர வேறு எந்த அரசும் செய்ய முடியாது.

மத்திய பா.ஜ.க அரசின் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கிற, தலையாட்டி பொம்மையாக அ.தி.மு.க அரசு மாறியதால் இத்தகைய நற்சான்றிதழை அடிப்படை ஆதாரமில்லாமல் பா.ஜ.க அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் நிறுவனமான தேசிய குற்ற ஆவணக் காப்பகமே இந்த நற்சான்றிதழ் உண்மைக்குப் புறம்பானது என்று அம்பலப்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 

.