This Article is From Jun 27, 2020

குருகிராமிற்கு படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்!

இதன் காரணமாக அருகில் உள்ள மற்ற பகுதிகளில் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் வீடுகளின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குர்கானில் வெவ்வேறு இடங்களில் காணப்படும் பாலைவன வெட்டுக்கிளிகளின் பெரும் திரள்.

Gurugram:

பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளின் திரள் தேசிய தலைநகரான டெல்லிக்கு அடுத்துள்ள குருகிராமை அடைந்துள்ளது. குருகிராம் நகரம் மற்றும் மாவட்டத்தின் கிராமங்களில் வசிப்பவர்கள் இன்று காலை படம்பிடித்த பல வீடியோக்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பினை காண முடிகின்றது. குறிப்பாக சைபர் ஹப் பகுதிக்கு அருகே ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் வானத்தினை மறைத்து பறந்து செல்வதை காண முடிகின்றது.

இதன் காரணமாக அருகில் உள்ள மற்ற பகுதிகளில் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் வீடுகளின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகன் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள், பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்பி தங்களை தற்காத்துக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வழிகாட்டியுள்ளது.

"வெட்டுக்கிளிகளின் திரள் காலை 11:00 மணியளவில் தொடங்கியது. நாங்கள் உடனடியாக ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டோம், பூச்சிகளை விரட்டுவதற்காக கட்டிடங்களில் நிறுவப்பட்ட சைரன்களை நிர்வாகம் ஒலிக்கத் தொடங்கியது" என குருகிராமில் உள்ள பெவர்லி பார்க் 2 இல் வசிக்கும் ரீட்டா சர்மா கூறியுள்ளார்.

"விவசாயிகள் தங்கள் பம்புகளையும் (பூச்சிக்கொல்லி தெளிப்பதற்காக) தயாராக வைத்திருக்க வேண்டும், இதனால் அவை தேவைப்படும்போது பயன்படுத்தப்படலாம்" என்று குருகிராம் நிர்வாகம் கூறியுள்ளது.

கிராமங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் குறித்து விழிப்புணர்வைப் பரப்ப வேளாண்துறை திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குள் நுழைந்து, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் ஏராளமான பயிர்களை பலைவன வெட்டுக்கிளிகள் அழித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு, மாநிலத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை சமாளிக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்கூட்டியே எடுக்குமாறு கடந்த மாதம், ஹரியானாவின் தலைமைச் செயலாளர் கெஷ்னி ஆனந்த் அரோரா உத்தரவிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்காவில் திரளாக உருவாகி ஈரான், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்கின்றன. வெட்டுக்கிளிகளின் அபரிமிதமான பசியின் காரணமாக அவை பயிர்களை பெருமளவு அழிக்கின்றன.

.