This Article is From Oct 23, 2018

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடையா..? - உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

பட்டாசு விற்பனையை முழுவதும் தடை செய்வதை ஏற்க முடியாத என்றும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடையா..? - உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், காற்று மாசினால் ஏற்படும் சுகாதார சீர்கேடு குறித்து கவலை தெரிவித்துள்ளது

ஹைலைட்ஸ்

  • சுத்தமான காற்றை சுவாசிப்பது, மக்களின் உரிமையாகும், மனுதாரர் வாதம்
  • பட்டாசு தடைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
  • 2016-ல் டெல்லியில் பட்டாசுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
New Delhi:

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘சுத்தமான காற்றை சுவாசிப்பது, மக்களின் உரிமையாகும். வளர்ச்சிக்கு சுத்தமான காற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலும் அவசியமாகும். டெல்லி, தற்போது உலகிலேயே மிக அசுத்தமான நகரமாக மாறியுள்ளது. காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் வயதினர் தான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வாதத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பட்டாசு விற்பனையை முழுவதும் தடை செய்வதை ஏற்க முடியாத என்றும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அதேபோல பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களும், ‘பட்டாசுக்கு முழு தடை விதிக்கப்பட்டால், அது பலரின் வாழ்க்கையை பாதிக்கும். பட்டாசு விற்பனை மட்டும் தான் காற்று மாசிற்கும், தீபாவளியின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் காரணம் என்று சொல்ல முடியாது. ஒரு தொழில் துறையையே மூடும் நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது' என்று கூறியுள்ளது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், காற்று மாசினால் ஏற்படும் சுகாதார சீர்கேடு குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு, தலைநகர் டெல்லி பகுதியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்த ஆண்டு டெல்லியின் காற்று மாசு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. மேலும், உலகின் மிக அதிக காற்று மாசு உள்ள நகரம் என்ற அவப் பெயரையும் டெல்லி பெற்றது. 

ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தடை உத்தரவை திரும்ப பெற்றது உச்ச நீதிமன்றம். ஆனால் அக்டோபர் முதல் மீண்டும் தடை உத்தரவை அமலுக்குக் கொண்டு வந்தது நீதிமன்றம்.

.