This Article is From Feb 02, 2019

கலைஞர் வழியிலேயே ஸ்டாலினும் பொய் பேசி வருகிறார்: செல்லூர் ராஜூ

கலைஞர் வழியிலேயே ஸ்டாலினும் மக்களிடத்தில் தற்போது வரை பொய்யாக பேசிக் கொண்டு வருகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

கலைஞர் வழியிலேயே ஸ்டாலினும் பொய் பேசி வருகிறார்: செல்லூர் ராஜூ

இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது,

40 தொகுதிக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார். 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நிற்பது போல் தான் தற்போது வரை பணியாற்றி வருகிறோம். தனித்து நிற்பதா? கூட்டணி வைப்பதா? என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும்.

அமைச்சர்களை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அரசியல் கருத்துக்கள் பேசலாம். ஆனால் கூட்டணி குறித்து ஆட்சிமன்ற குழுக்கள் மற்றும் தலைமை தான் முடிவெடுக்கும். அதுவும் தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. ஊர் ஊராக சென்று ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார். துணை முதல்வராக ஸ்டாலின் இருந்த போது எந்த ஒரு ஊருக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்கவில்லை.

கலைஞர் வழியிலேயே ஸ்டாலினும் மக்களிடத்தில் தற்போது வரை பொய்யாக பேசிக் கொண்டு வருகிறார். திமுக ஆளுங்கட்சியாக வந்தால் குடும்பத்தை மட்டுமே நினைக்கும் ஒரு கட்சியாக மாறும் என்று அவர் கூறியுள்ளார்.

.