Coronavirus lockdown: அத்தியாவசிய பொருட்களுக்கான போராட்டத்துடன் ஊரடங்கு தொடக்கம்!
ஹைலைட்ஸ்
- அத்தியாவசிய பொருட்களுக்கான போராட்டத்துடன் ஊரடங்கு தொடக்கம்!
- 530 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- உலகின் மிகப்பெரிய முடக்கம் தொடங்கியது.
New Delhi: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மூன்று வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு அறிவித்ததைத் தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த கவலைகளுடன் உலகின் மிகப்பெரிய முடக்கம் தொடங்கியது. நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுவதாகவும், அடுத்த 3 வாரங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது பற்றி சிந்திக்காமல் வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொண்டார். இந்தியாவில் இதுவரை 530 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 2 நாட்களாக நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. நாட்டைக் காக்க நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டுமொத்த இந்தியாவே முடக்கப்படவுள்ளது. இந்த தேசிய ஊரடங்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களின் உயிர்கள் எனக்கு முக்கியமானது. எனவே நீங்கள் நாட்டின் எந்தப் பக்கத்திலிருந்தாலும் நடமாட்டத்தைத் தவிர்த்துக் கொள்ளவும். அடுத்து வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு இருக்கும். இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
அந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், பல மாநிலங்களில் மக்கள் கடைகளுக்கு விரைந்து செல்வதைக் காண முடிந்தது. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மளிகைக் கடைகளைச் சுற்றி திரண்டு இருந்தது காணப்பட்டது. மேலும், விலைகள் உயர்வு குறித்து பலர் புகார் கூறி வருகின்றனர்.
என்னென்ன விற்பனையகங்கள் திறந்திருக்கலாம் என்ற குழப்பத்திற்கு மத்தியில் காவல்துறையினரின் நடவடிக்கை பயந்து கடைகள் மூடப்பட்டன. அனைத்து மாநிலங்களும் எல்லைகளை மூடியதால், பால், பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் நீண்ட வரிசையில் நெடுஞ்சாலையில் ஊர்ந்து சென்றன.
உணவு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் பற்றாக்குறை எனக் கூறப்படும் வதந்திகளைக் கண்டிப்பாகக் கண்காணிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உணவு, மளிகை சாமான்கள், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகளைத் திறந்திருக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவன சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மளிகைப் பொருள்களை வழங்கும் அமேசான் இந்தியாவின் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. தினமும் காலையில் டெல்லியில் 150 லிட்டர் பால் மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் ஒரு சிறிய ஆன்லைன் பால் விநியோக சேவையில் பணிபுரியும் அந்தோனி தாமஸ், தனது முதலாளி தன்னை வீட்டிலேயே இருக்கச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அத்தியாவசிய பொருட்கள் அல்லது மருந்துகளுக்கு, மக்கள் ஹெல்ப்லைனை அழைக்கலாம் என்றும் அதன் மூலம் வீட்டு வாசலில் வழங்குவதையும் உறுதிப்படுத்தினார். ஆனால் பலர் அந்த அழைப்புக்கு அழைத்த போதிலும், முறையாக பதில் தெரிவிக்கப்படுவத்திலை என்று புகார் கூறினர்.