This Article is From Mar 15, 2020

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்கேஜி, யுகேஜி மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட 5 வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வேகமாகப் பரவி வரும் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்கேஜி, யுகேஜி மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட 5 வகுப்பு வரை  அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

ஏற்கெனவே இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்த உத்தரவில், கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்டப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அளித்திருந்து. மேலும், தமிழகம் முழுவதும் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை அளித்திருந்தது. 

அதன்படி, கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களாகும். 

இந்நிலையில் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதேபோல, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் ப்ரீகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்புக்கான காரணம் எதையும் பள்ளிக் கல்வித்துறை குறிப்பிடாத நிலையில் இன்று முதல்வர் எல்கேஜி, யுகேஜி மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறையை உறுதி செய்து அறிவிப்பினை வெளியிட்டார்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தாஸ் தெரிவித்துள்ளார். 

.