சாத்தான்குளம் வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியின் கணவர் சொல்வது என்ன?

சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியின் கணவர் சொல்வது என்ன?

சிபிஐ வழக்கை எடுக்கும் முன்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

ஹைலைட்ஸ்

  • சாத்தான்குளம் வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது
  • சாத்தான்குளம் சம்பவ வழக்கு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது
  • சிபிஐ-யிடம் இந்த வழக்கு விசாரணை ஒப்படைக்கப்படும்

தூத்துக்குடியின் சாத்தான்குளத்தில் காவலர்களின் பிடியில் இருந்தபோது உயிரிழந்த தந்தை மகனான, ஜெயராஜ் - பென்னிக்ஸ் விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. இந்த லாக்கப் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு என்ன நடந்தது என்பது குறித்து காவல் நிலையத்தோடு தொடர்புடைய பெண் காவலர் ரேவதி அளித்துள்ள சாட்சியத்தால், வழக்கு விசாரணையில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் காவலர் ரேவதியின் கணவர், “அன்று என்ன நடந்தது என்பது குறித்து எனது மனைவி என்னிடம் கூறினார். அப்போது இது குறித்து உன்னிடம் கேட்கப்பட்டால், உண்மையைச் சொல் எனத் தெரிவித்தேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. என் பெரிய பிள்ளையும், உண்மையையே சொல்லும்படி என் மனைவியிடம் வலியுறுத்தினாள். இதைத் தொடர்ந்துதான் நடந்தது குறித்து சாட்சியம் அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் சம்பவம் குறித்து எங்கு வேண்டுமானாலும் வந்து சாட்சியம் கொடுக்க என் மனைவி தயாராக இருக்கிறார். ஆனால், அவருக்கும் என் குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இதுவரை அரசு தரப்பிலிருந்து எங்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு பேசப்பட்டதே தவிர, பாதுகாப்புக்கு என்று யாரும் அமர்த்தப்படவில்லை. உடனடியாக எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்,” என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழக தென் மண்டல ஐ.ஜி.முருகன், “பெண் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பைக் கொடுத்துள்ளோம். அவர் ஒரு மாதம் ஊதியம் கொடுத்து விடுப்பு கேட்டார். அதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது,” எனக் கூறியுள்ளார். 

கடந்த ஜூன் 19 ஆம் தேதி, தூத்துக்குடியின் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி, தங்களின் கடையை சுமார் 15 நிமிடம் கூடுதலாக திறந்து வைத்தனர் என்று குற்றம் சாட்டி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவல் துறை கைது செய்தது. போலீஸ் தரப்பு, ‘ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களை அவர்கள் மிரட்டவும் செய்தனர். சாலையில் படுத்து உருண்டதால் அவர்களின் உடலில் காயம் ஏற்பட்டது,' என்று கூறியிருந்தது. 

காவல் துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. உடலில் உள்ளேயும் வெளியேயும் காயங்கள் இருந்ததாக சொல்லும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர், பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதிகளிலும் ரத்தம் வடிந்ததாக அதிர்ச்சிப் புகார்களை சுமத்தியுள்ளனர். 

ஜூன் 22 ஆம் தேதி பென்னிக்ஸ், மருத்துவமனையில் இறந்துவிட, அவரின் தந்தை அடுத்த நாள் காலமானார். இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு, சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளது.

முன்னதாக வழக்கு குறித்து நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரணையின்போது கான்ஸ்டபிள் மகாராஜன், “நீங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது,” என்று மிரட்டியுள்ளதாக நீதிமன்றத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டி நீதிமன்றம், துணை எஸ்.பி சி.பிராதபன், கூடுதல் துணை எஸ்.பி டி.குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்புக்கு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் நீதிமன்றம், ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதற்கு முகாந்திரம் உள்ளது,' என்று கறாராக குறிப்பிட்டுள்ளது. 

சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சிபிஐ வழக்கை எடுக்கும் முன்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த சிபிசிஐடி போலீசார், நேற்று முதல் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து போலீசாரையும் கைது செய்துள்ளனர். இதில், 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.