ரஷ்யாவால் ரஷ்யா – இந்தியா – சீனா நாடுகளின் மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள இந்தியா முதலில் மறுப்பு தெரிவித்து விட்டது.
ஹைலைட்ஸ்
- இந்தியா - சீனா எல்லை பிரச்னை குறித்து ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது
- எல்லை பிரச்னையை தீர்க்க வெளிநாட்டு உதவி தேவைப்படாது என்கிறது ரஷ்யா
- முன்பு அமெரிக்கா பிரச்னையை தீர்க்க உதவி செய்வதாக கூறியிருந்தது
எல்லை பிரச்னையை இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ளும் என்றும், இதற்கு வெளிநாட்டின் உதவி தேவையில்லை என்றும் இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்கும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் திங்களன்று லடாக் எல்லையில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். 76 பேருக்கு காயம் ஏற்பட்டது. கற்கள், ஆணி அடிக்கப்பட்ட கம்பிகள், இரும்பு கம்புகள் உள்ளிட்டவற்றால் சீன ராணுவம் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலியான சீன வீரர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 45 என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்கும் ரஷ்யா, இரு நாட்டின் எல்லைப் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது-
எல்லைப் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்கு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் வெளிநாட்டின் உதவி தேவையில்லை. அவர்களாகவே தங்களுக்குள் எழுந்திருக்கும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வார்கள்.
அமைதியான முறையில் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவருவதில், சீனாவும், இந்தியாவும் உறுதியாக இருக்கின்றன. இருநாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இரு நாட்டின் வெளியுறவ அமைச்சர்களும் பிரச்னை குறித்து பேசியுள்ளனர்.
இந்தியாவும் சீனாவும் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் பிரச்னை சுமுகமாக பேசி முடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ரஷ்யாவால் ரஷ்யா – இந்தியா – சீனா நாடுகளின் மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள இந்தியா முதலில் மறுப்பு தெரிவித்து விட்டது.
பின்னர் ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று மாநாட்டில் கலந்து கொண்டது. இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.