This Article is From Dec 06, 2019

வெங்காயம் கிலோ 25 ரூபாயா? போட்டி போட்டு வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள்!!

வெங்காயம் கிலோ ஒன்றை ரூ. 25-க்கு மானிய விலையில் விற்பனை செய்வதற்கு ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெங்காயம் கிலோ 25 ரூபாயா? போட்டி போட்டு வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள்!!

விஜயநகரத்தில் சீபுருபள்ளி கிராமத்தில் வாடிக்கையாளர்கள் வெங்காயம் வாங்கும் காட்சி.

Vizianagaram:

வெங்காயம் கிலோ ஒன்று ரூ. 25-க்கு  விற்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு அவற்றை வாங்கிக் சென்றனர். இதனால் ஆந்திராவின் விஜயநகர மார்க்கெட்டில் தள்ளுமுள்ளு வியாழக்கிழமை காணப்பட்டது. 

நாட்டின் பல்வேறு இடங்களில் வெங்காயம் கிலோ ஒன்று ரூ. 100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் அரசு மானிய விலையில் வெங்காயத்தை ரூ. 25-க்கு விற்பனை செய்து வருகிறது. 

இதில் கட்டுப்பாடு என்னவென்றால், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரேயொரு கிலோ வெங்காயத்தை மட்டுமே வாங்க வேண்டும். 

இவ்வாறு வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது என்ற தகவலை அறிந்த ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் சீபுருபள்ளி கிராம மக்கள், மார்க்கெட்டிற்கு வியாழன் அன்று விரைந்தோடினர். நீண்ட வரிசையில் நின்ற அவர்கள், விற்பனைக்காக கேட்டில் காத்திருந்தனர். 

வெங்காயம் மூட்டை மூட்டையாக வந்து இறங்கியதை தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வெங்காயத்தை வாங்க முன்வந்தனர். சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் எனல பலரும் குறுகலான வழியில் நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு காணப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், மொத்தம் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் இருப்பு வைப்பதற்கு 50 சதவீத கட்டுப்பாடை மத்திய அரசு விதித்துள்ளது. இதன்படி மொத்த விற்பனையாளர்கள் 25 டன்னுக்கும் அதிகமான அளவு வெங்காயத்தை இருப்பில் வைத்திருக்க முடியாது. சில்லறை விற்பனையாளர்களை பொருத்தளவில் அவர்கள் 5 டன்னுக்கும் அதிகமாக இருப்பில் வைத்திருக்க கூடாது. நாட்டின் முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்று ரூ. 75 முதல் 100 வரையில் விற்பனையாகிறது. கொல்கத்தாவை பொறுத்தளவில் வெங்காயத்தின் விலை ரூ. 150யை தொட்டுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. 
 

(With inputs from ANI)

.