This Article is From Feb 09, 2019

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் இடைத் தேர்தலை நடத்த தயார்! - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் இடைத் தேர்தலை நடத்த தயார்! - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன
  • இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
  • இடைத்தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்

மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மொத்தம் 21 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. அதிமுகவில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து 18 இடங்கள் காலியாக உள்ளதென கடந்த 2017 செப்டம்பர் மாதத்தின்போது அறிவிப்பு வெளியானது. இதன் பின்னர் 3 தொகுதிகள் காலியாக உள்ளதென்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலையும் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும். அப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். 

இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்துவதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் உள்ளிட்டவைகளை நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம். இதேபோன்று தேர்தல் நடத்தும் பணியாளர்களும் தயார்நிலையில் இருக்கின்றனர். மற்றபடி சட்டம் ஒழுங்கு பிரச்னை எதிர் கொள்வது என அனைத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். 

.