This Article is From May 15, 2020

வாட்ஸ்ஆப் வழியே உறவினர்களிடம் பேச அனுமதிக்கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல்!

நளினி தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை மே 22-க்கு ஒத்தி வைத்தனர்.

வாட்ஸ்ஆப் வழியே உறவினர்களிடம் பேச அனுமதிக்கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல்!

1991- மே 21-ம்தேதி ஸ்ரீ பெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

Chennai:

வாட்ஸ்ஆப் வழியே உறவினர்களிடம் நாள்தோறும் 10 நிமிடம் பேசுவதற்கு அனுமதி அளிக்கக் கோரி ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை மே 22-க்கு ஒத்தி வைத்தனர். 

நளினி தரப்பில் அவரது தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவில், 'நளினிக்கு நாள்தோறும் 10 நிமிடங்கள் அவரது மகள், கணவர், கணவரின் தாயார் மற்றும் சகோதரியுடன் வாட்ஸ் ஆப்பில் பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

கடந்த ஏப்ரல் 27, 2020 அன்று ராஜில் கொலை வழக்கில் தண்டனை  பெற்று வரும் முருகனின் தந்தைக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதனை வாட்ஸ்ஆப் வழியே பார்ப்பதற்குக்கூட முருகனை தமிழக அரசு அனுமதிக்கவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனதுமகள் ஏப்ரல் 28-ம்தேதி என்னை போனில் அழைத்து வீடியோ கால் தொடர்பான மனுவை தாக்கல் செய்யுமாறு கூறினார். இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் மே 4-ம்தேதி மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த விஷயத்தில் வீடியோ அழைப்புகளுக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் கணவர் முருகனின் தாயாரும், அவரது சகோதரியும் லண்டனில் உள்ளனர். 

நளினி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை மீண்டும் மே 22-ம்தேதி நடைபெறவுள்ளது. 

1991- மே 21-ம்தேதி ஸ்ரீ பெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

முன்பு அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதனை நீதிமன்றம் ஆயுளாக குறைத்தது குறிப்பிடத்தக்கது. 

.