This Article is From Feb 13, 2019

ஐமுகூ அரசு செய்ததைவிட 2.8% விலை குறைவானது தற்போதைய ரஃபேல் டீல்- சிஏஜி அறிக்கை

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை இன்று ராஜ்யசபாவில் சமர்பிக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் சமர்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கை ஒருதலைபட்சமானதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளன எதிர்கட்சிகள்

New Delhi:

மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்ததைவிட, தற்போது பாஜக அரசு செய்துள்ள ரஃபேல் ஒப்பந்தம் 2.8 சதவிகிதம் விலை குறைவானது என்று சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் NDTV-க்கு கிடைத்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை இன்று ராஜ்யசபாவில் சமர்பிக்கப்பட்டது. அதில் எதிர்கட்சிகள் தொடர்ந்து கேட்டு வந்த, போர் விமானம் தொடர்பான விலை குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் முன்னரே, ‘விமானங்கள் குறித்த விலையை வெளியிடுவது தேசிய பாதுகாப்பை விற்பது போல ஆகிவிடும். எனவே, அது குறித்து சொல்ல முடியாது' என்று விளக்கம் அளித்திருந்தது.

இன்று ராஜ்யசபாவில் சமர்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கை ஒருதலைபட்சமானதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளன எதிர்கட்சிகள். இதற்குக் காரணம் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானபோது, அப்போது நிதித் துறை செயலராக இருந்தவர் ராஜீவ் மெஹ்ரிஷி. அவர்தான் தற்போது ஆடிட்டராக இருக்கிறார்.

சிஏஜி-யின் அறிக்கையில், ‘போர் விமானத்தின் அடிப்படை விலையானது காங்கிரஸ் ஆட்சியின் போதும், இப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின் போதும் ஒன்றுதான். ஆனால், அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில் விமானத்தில் இருந்த பாகங்களைவிட, 13 பாகங்கள் கூடுதலாக இந்திய தரப்பிலிருந்து கேட்கப்பட்டது. அதை வைத்துப் பார்க்கும்போது முன்னர் போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட, தற்போதைய ஒப்பந்ததால் இந்திய தரப்பு 17.08 சதவிகிதம் நிதியை சேமிக்க முடிந்தது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம், பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு குழு, 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுத்தது. அதற்குக் காரணம், அப்போது ரஃபேல், மிகவும் குறைவான விலையில் விமானங்களை செய்ய ஏலம் எடுக்கவில்லை. ஏலம் எடுத்த நிறுவனம், கேட்ட உபகரணங்களை கொடுக்க முன்வரவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்குப் பின்னர் அருண் ஜெட்லி, ‘உச்ச நீதிமன்றத்தை நம்ப முடியாது, சிஏஜி அறிக்கையை நம்ப முடியாது, ஆனால் ராகுல் சொல்வதுதான் உண்மை' என்று கேலி செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ தொடர்ந்து, ‘ரஃபேல் விவகாரத்தில் அனில் அம்பானியின் தரகர் போல பிரதமர் மோடி நடந்து கொண்டுள்ளார். அவர் ஒரு திருடன்' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்.

.