This Article is From Mar 25, 2019

நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு - திமுக-விலிருந்து ராதாரவி நீக்கம்..!- என்ன நடந்தது?

இந்த விவகாரம் பூதகரமானதை அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன், ட்விட்டரில் வருத்தம் தெரிவித்தார்

நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு - திமுக-விலிருந்து ராதாரவி நீக்கம்..!- என்ன நடந்தது?

இது குறித்து நான் விக்னேஷ் சிவனிடமே பேச தயாராக இருக்கிறேன்- ராதாரவி

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கொலையுதிர் காலம்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதையடுத்து, அவர் திமுக-விலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி, ‘நயன்தாரா இன்னைக்கு ஒரு ஸ்டார். புரட்சித் தலைவர், ரஜினி படத்தோட நயன்தாரா படத்தை ஒப்பிடாதீர்கள். அவர்களெல்லாம் லெஜண்ட்ஸ். நயன்தாரா ஒரு நல்ல நடிகை. சினிமாவில இவ்ளோ நாள் இருக்கிறதே பெரிய விஷயம். அவங்கள பற்றி வராத செய்தி இல்லை. அவ்வளவும் செய்தியையும் தாண்டி நிற்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எப்பவும் நாளு நாளைக்குதான் ஒரு விஷயத்தை நியாபகம் வச்சிருப்பாங்க. அப்புறம் அதை விட்டுடுவாங்க.

ஆனால், இப்ப பிரமாதமாக நடிச்சிட்டு இருக்காங்க. நயன்தாரா, பேயாகவும் நடிக்கிறாங்க. அந்தப் பக்கம் சீதாவாகவும் நடிக்கிறாங்க. முன்பெல்லாம் சாமி வேஷம் போடறதுன்னா கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவாங்க. ஆனால், இப்பல்லாம் யாரு வேணும்னாலும் போடலாம் சாமி வேஷம். இப்பல்லாம், கும்பிட்றவங்கையும் சாமி வேஷம் போடலாம். கூப்பிட்றவங்களையும் சாமி வேஷம் போடலாம். அப்டியாகிடுச்சு சினிமா' என்று பேசினார். இந்த பேச்சு குறித்து வெளியே தெரிந்தவுடன் பலர் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பைப் பதிவிட்டனர்.

இந்த விவகாரம் பூதகரமானதை அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன், ‘என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போயுள்ளேன். ஏனென்றால் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்து கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் அவருக்கு எதிராக யாரும் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்கள். விளம்பரத்துக்காக இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் பேச்சுக்கு கூடியிருந்த மக்களும் கைதட்டி சிரித்தது மேலும் என்னை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு முடிவுறாத படத்துக்கு இப்படியொரு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்பது குறித்து எங்கள் யாருக்கும் தகவல் தெரியாது.

நடிகர் சங்கத்தில் இருந்தோ, வேறு சங்கத்தில் இருந்தோ அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது' என்று ட்விட்டர் மூலம் வருத்தப்பட்டார்.

இதைத் தொடர்ந்து திமுக தலைமை, ‘நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக திமுக-விலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ள ராதாரவி, ‘திமுக-விலிருந்து நான் ஏன் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளேன் என்று தெரியவில்லை. அது குறித்து நான் தகவல் அறிந்தவுடன், அப்படியென்றால் நானே விலகிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். என்னால் திமுக-வுக்கு எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்று நினைத்து நானே விலகிக் கொண்டேன்.

நயன்தாரா பற்றி மனது நோகும்படி பேசியிருந்தால், மன வருத்தப்படுகிறேன். இது குறித்து நான் விக்னேஷ் சிவனிடமே பேச தயாராக இருக்கிறேன். ஒரு விவகாரத்தில் பிரச்னையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் உருவாக்க முடியும். நான் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்கத் தயாராகவே இருப்பேன்' என்று விளக்கம் அளித்துள்ளார்.

.